

டெஹ்ரான்: ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான தனது தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, பாரசீக வளைகுடாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் பிரம்மாண்டமான ‘யுஎஸ்எஸ் லிங்கன்’ போர்க்கப்பல் மீது நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை டெஹ்ரானில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் சக்திவாய்ந்த குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தின. இதில் 86 வயதான ஈரானின் உச்ச தலைவர் காமேனி, ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நாசர்சாதே மற்றும் ராணுவத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தகவலை இன்று அதிகாலை ஈரான் உறுதிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அலிரேசா அராபி நியமிக்கப்பட்டுள்ளார்.
காமேனியின் மறைவுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் மீதும், அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ள துபாய், அபுதாபி, தோஹா மற்றும் மனாமா ஆகிய நகரங்கள் மீதும் சரமாரியாக ஏவுகணைகளை ஈரான் வீசி வருகிறது. துபாயில் உள்ள சிஐஏ தலைமையகம் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதற்கிடையில், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாங்கள் முடக்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், உலக நாடுகள் இப்பகுதிகளில் உள்ள தங்களது குடிமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முயற்சித்து வருகின்றன. இந்திய வெளியுறவுத் துறை நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், இந்தியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.