யார் இந்த அயத்துல்லா அலி கமேனி? - ஈரான் உச்ச தலைவரின் பின்புலம்

அயத்துல்லா அலி கமேனி | கோப்புப்படம்

அயத்துல்லா அலி கமேனி | கோப்புப்படம்

Updated on
2 min read

அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு ராணுவத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்தது உறுதி செய்யல்பட்டுள்ளது. இவரது பின்புலம் குறித்து சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.

மேற்கு ஆசிய நாடான ஈரானின் அரசியல் வரலாற்றை அயத்துல்லா அலி கமேனிக்கு முன் கமேனிக்கு பின் என்று பிரித்துக் கொள்ளலாம். கமேனி, 1939-ம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ஜாவேத் கமேனி ஒரு மதகுரு. 1960 முதல் 70 வரை ஈரானில் இருந்த ஆட்சியை திரைமறைவில் இருந்து அமெரிக்கா இயக்கிக் கொண்டிருந்தது எனலாம். ஷா வம்சத்தினரின் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது. ஈரான் மேற்கத்திய கலாச்சாரத் தன்மையில் மூழ்க ஆரம்பித்திருந்தது.

அப்போது அயோதுல்லா கமேனி, ஈரான் மேற்கத்திய கலாச்சார மயமாக்கலுக்கு உள்ளாவதற்கு எதிராக போராடும் குழுக்களுடன் இணைந்து போராடி வந்தார். ருஹொல்லா கொமேனியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். புரட்சியில் ஆட்சியாளர்களை ஸ்தம்பிக்க வைத்ததால், ஷா ஆட்சியின் ரகசிய போலீஸாரால் கமேனி கைதும் செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஷா குடும்பத்தினர், ஈரானில் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளின் தலையீட்டால் பொருளாதார ஏற்றம் வரும் என காத்திருந்தனர். ஆனால், ஈரான் எண்ணெய் வளம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதே தவிர, அங்கு எந்த செழிப்பும் ஏற்படவில்லை. அப்போதுதான் ஈரான் மதகுருக்கள், அறிவுஜீவிகள், மாணவர்கள் இணைந்து ஒரு புரட்சியை நடத்தினர். அதன் விளைவாக 1979-ல் ஷா ஆட்சி அதிகாரம் தூக்கி வீசப்பட்டது.

ஈரான் ஓர் இஸ்லாமிய குடியரசு ஆனது. இஸ்லாமிய புரட்சிகர கவுன்சிலின் உறுப்பினரானார் கமேனி. முகமது அலி ரஜாயி ஈரான் அதிபரானார். ஆனால், ஒரு குண்டு வீச்சு நிகழ்வில் முகமது அலி கொல்லப்படவே, 1982-ல் ஈரான் அதிபரானார் கமேனி. 1989-ல் ஈரானின் உச்ச தலைவரானார். அன்று தொட்டு தன் கடைசி நாள் வரை அவர் தான் ஈரானின் உச்ச தலைவராக இருந்தார்.

ஒரு சிறந்த கவிஞர், கவிதை ரசிகர். அவருடைய அவையில் எப்போதும் அரசைப் புகழ்ந்துபாடும் கவிராயர்கள் சூழ்ந்திருப்பர். அவரும் அப்படித்தான் இருந்தார். எனினும், அவரே அனைத்து அதிகாரங்களையும் வைத்திருக்கும் உச்ச தலைவராக வலம் வந்தார். புரட்சிக்குப் பின்னரும் கூட ஈரான் அமைதியாக இல்லை. அண்டை நாடான ஈராக் உடன் 1980 முதல் 88 வரை போர் செய்தது. அதை புனிதப் போர் என்று அழைத்தது.

ஈரானை எத்தகைய போர் சூழல் வந்தாலும் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது கமேனியின் நிலையான குறிக்கோளாக இருந்தது. அதனைச் சுற்றியே ஈரானின் எல்லா செயல்பாடுகளும் கட்டமைக்கப்பட்டன.

இஸ்லாமிய சட்டப்படி நடக்கும் ஆட்சியில் கமேனிக்கு நாட்டின் அரசு, நீதித்துறை, ஊடகம் என அனைத்தின் மீதும் வானளாவிய அதிகாரம் இருந்தது. இந்த ஏகபோக அதிகாரம்தான் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்று சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும், இளைஞர்களும் கருதினர் என்பதும் கவனிக்கத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த கமேனி, அமெரிக்க - இஸ்ரேல் கூட்டு ராணுவத் தாக்குதலில் மரணம் அடைந்தார். டெஹ்ரானில் சனிக்கிழமை கமேனி தனது அலுவல் பணிகளை வழக்கம் போல கவனித்துள்ளார். அப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பு நடத்திய தாக்குதலில் அந்த கட்டிடம் சேதமடைந்தது. இதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்தன. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் கமேனி மற்றும் அவரது மகள், மருமகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் உயிரிழந்தனர்.

கடந்த 2023-ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஹமாஸின் புகலிடமாக உள்ள காசா மீது இஸ்ரேல் தரப்பு தாக்குதல் தொடுத்தது. அதில் காசா மக்கள் உயிரையும், உடமைகளையும் இழந்தனர். இஸ்ரேலின் இந்த செயலை இனப்படுகொலை என கமேனி பேசினார். அதே நேரத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹிஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் இதர பிராந்திய ரீதியான பயங்கரவாத படைகளுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்த சூழலில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்தது. இரண்டாவது முறையாக அதிபர் பொறுப்பை ஏற்றார் டொனல்டு ட்ரம்ப். அதன் பின்னர் கடந்த ஆண்டு ஈரானில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலும் அமெரிக்காவுடன் இணைத்து கொண்டது. அப்போது ஈரானின் ராணுவ தளங்களும் குறிவைக்கப்பட்டன.

பதுங்கு அறையில் தங்கியிருந்த கமேனி, அப்போதே தனக்கு அடுத்து நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க மூன்று பேரை வாரிசுகளாக அறிவித்தார். அவர்கள் மூவரில் ஒருவரை தலைவராக நியமிக்க அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் உடனான உறவு மற்றும் உதவி செய்வதை தவிர்க்க வேண்டும் என அவர் தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

<div class="paragraphs"><p>அயத்துல்லா அலி கமேனி |&nbsp;கோப்புப்படம்</p></div>
“சரண் அடையுங்கள் அல்லது மரணம் நிச்சயம்” - ஈரான் ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in