

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஆனால், அது செயல் இழந்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரான் -அமெரிக்கா இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவு பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் புரட்சிக்கர ராணுவப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க ராணுவத்தின் மிக நவீன மற்றும் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்களில் ஒன்றை நாங்கள் பிடித்திருக்கிறோம். சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த கப்பல் அமெரிக்க ராணுவத்தால் இயக்கப்படும் மிகவும் மேம்பட்ட அமைப்புகளில் ஒன்றாகும். இந்த டைவ்-எல்டி வகை நீர்மூழ்கிக் கப்பல் தற்போது ஈரான் வசம் இருக்கும் ஒரு பரிசு” என தெரிவிக்கப்படுள்ளது.
இதனிடையே ஈரான் ராணு வம் கைப்பற்றுவதற்கு ஒரு நாளுக்கு முன்பே அந்த நீர்மூழ்கி கப்பல் பழுதடைந்து விட்டதாகவும், அது தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் விளக்கம் அளித்துள்ளது.
அதன் செய்திதொடர்பாளர் கூறும்போது, “பழைய டைவ்-எல்டி மாடலான அந்த நீர்மூழ்கி கப்பல் முக்கியமான தரவுகளைச் சேகரிக்கவோ அல்லது எந்தவொரு ரகசிய ரேடார் கருவிகளை கொண்டிருக்கவில்லை” என்றார்.