

அகமதாபாத்: உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான நேற்று மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, கஜகஸ்தானின் ஐதா செய்டனுடன் மோதினார்.
இருவரும் 144 புள்ளிகளை குவித்ததால் வெற்றியை தீர்மானிக்க ஷூட்அவுட் நடத்தப்பட்டது. இதில் ஷீத்தல் தேவி 10-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
ரீகர்வ் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், பாவ்னா ஜோடி 6-0 என்ற கணக்கில் சீனாவின் லியாங் கியுரோங், சியா லீ ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. ரீகர்வ் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பாவ்னா 6-0 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ராஜயை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, தோமன் குமார் ஜோடி 157-145 என்ற செட் கணக்கில் இராக்கின் சாரா அல் ஹமித், அப்பாஸ் காதிம் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் பெற்றது.
மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் சரிதா 141-140 என்ற கணக்கில் சீனாவின் வாங் ஹூட்டிங்கை வீழ்த்தி வெண்கலம் வென்றார். ஆடவருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தோமன் குமார் வெண்கலம் கைப்பற்றினார்.