

டெஹ்ரான்: போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போரில் தற்போது தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. யுரேனியம் செறிவூட்டல் பிரச்சினை தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதில் இழுபறி நீடிப்பதால் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நிலவுகிறது. இதனிடையே நிரந்தர போர் நிறுத்தத்துக்கு ஈரான் புதிய சமரச திட்டத்தை பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவிடம் வழங்கியுள்ளது.
ஆனால் இந்த சமரச திட்டத்தில் தனக்கு திருப்தி இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதனிடையே ஈரான் அளித்த சமரச திட்டம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஈரான் 14 அம்சங்களை தெரிவித்து இருக்கிறது. லெபனான் உள்பட அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
ஈரானைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகையை நீக்க வேண்டும். அமெரிக்க படைகளை திரும்ப பெற வேண்டும். ஹார்முஸ் ஜலசந்திக்கு ஒரு புதிய நிர்வாக அமைப்பை நிறுவ வேண்டும். ஈரான் மீதான தடைகளை நீக்க வேண்டும். முடக்கப்பட்ட ஈரான் நாட்டு சொத்துக்களை விடுவிக்க வேண்டும். ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்சங்கள் அதில் இடம் பெற்று உள்ளன.
மேலும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க 30 நாள் காலக்கெடுவைவும் ஈரான் வலியுறுத்தி உள்ளது. ஈரான் அளித்த சமரச திட்டத்தில் திருப்தி இல்லை என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளார்.
ட்ரம்ப் பரிசீலனை: இதுதொடர்பாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஈரான் தற்போது எங்களுக்கு அனுப்பியுள்ள சமரச திட்டத்தை நான் விரைவில் ஆய்வு செய்ய உள்ளேன். ஆனால், கடந்த 47 ஆண்டுகளில் மனிதகுலத்துக்கும் உலகுக்கும் எதிராக அவர்கள் செய்த செயல்களுக்கு இன்னும் போதுமான அளவு பெரிய விலையை அவர்கள் செலுத்தாத நிலையில், அத்திட்டம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும் என்று என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. இவ்வாறு ட்ரம்ப் கூறி உள்ளார்.
இதனிடையே நேற்று ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரீபாபடி கூறியதாவது: போரை நிறுத்துவது தொடர்பான 14 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்காவுக்கு வழங்கிவிட்டோம். இப்போது முடிவு அமெரிக்காவின் கையில் உள்ளது. ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுப்பதா அல்லது மோதல் போக்கை நீடிப்பதா என்பதை அமெரிக்காதான் முடிவு செய்யவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.