இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்

இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்
Updated on
1 min read

டெஹ்ரான்: மத்திய் கிழக்கில் போர் 20-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் சேதமடைந்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான தெற்கு பார்ஸ் ஈரானின் உள்நாட்டுத் தேவைகளுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் எரிசக்தித் தேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரான் தாக்கியுள்ளது. வியாழக்கிழமை (மார்ச் 19) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்ததோடு, மின் இணைப்புகளும் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டன.

தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சர் ஏலி கோஹன், சுத்திகரிப்பு நிலையத்திற்குப் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதால் அதன் சிதறல்களே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்தப் பகுதியில் சில இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹைஃபா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த் தொடர் தாக்குதல்கள் காரணமாக சர்வதேச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 115 டாலரைத் தாண்டியுள்ளது. ஈரான் தனது எல்லையிலுள்ள எரிசக்தி தளங்களை மட்டுமல்லாமல், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்களையும் குறிவைத்து வருவதால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலை 30 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலை முழுமையாக அழித்துவிடுவோம் என்று எச்சரித்துள்ள நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "எங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீண்டும் தாக்கப்பட்டால் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பதிலடி கொடுப்போம்" என்று பதிலடி கொடுத்துள்ளார். 

இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்
வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் எதிரொலி - 115 டாலராக அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in