வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் எதிரொலி - 115 டாலராக அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

இந்திய பங்குச் சந்தையிலும் கடும் வீழ்ச்சி!
கத்தாரின் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையம்

கத்தாரின் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையம்

Updated on
2 min read

தெஹ்ரான்: தனது முக்கிய எரிவாயு வயல்களில் ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, பல வளைகுடா எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாலும், தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளதாலும் இன்று பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 115 டாலரைத் தாண்டியது. மேலும், பங்குச் சந்தைகளும் சரிந்தன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதையடுத்து, இஸ்ரேலுக்கு எதிராகவும், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்கள் ஆகியவற்றை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை ஏற்றிச் செல்லும் வர்த்தக கப்பல்களுக்கு ஈரான் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், ஈரானில் உள்ள முக்கிய எரிவாயு வயலான சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, கத்தாரின் ராஸ் லஃபான் ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், கத்தார் கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பல் சேதமடைந்தது. அதோடு, ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பல் எரிந்து சாம்பலானது.

ஈரானின் தாக்குதல் குறித்து அந்நாட்டு ராணுவத்தின் செயல் தளபதி காதம் அல் அன்பியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் எதிரிகள் ஒரு பெரும் தவறை இழைத்துள்ளனர் என நாங்கள் எச்சரிக்கிறோம். இதற்கான பதிலடி நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அது இன்னும் முடிவடையவில்லை.

இது போன்ற ஒரு தாக்குதல் மீண்டும் நிகழுமாயின், உங்கள் மற்றும் உங்கள் நட்பு நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்படும் வரை, அவற்றின் மீதான எங்கள் தொடர் தாக்குதல்கள் நிற்காது. எங்கள் பதிலடி நடவடிக்கை கடந்த இரவு நடத்தப்பட்ட தாக்குதல்களைவிட பல மடங்கு தீவிரமானதாக இருக்கும்” எச்சரித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் இந்தப் பதற்றமான சூழல் காரணமாக சர்வதேச சந்தைக்கான எரிபொருள் வரத்து குறைந்து வருகிறது. இதனால், எரிபொருட்களின் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 115 டாலரைத் தாண்டி உள்ளது. ஐரோப்பாவில் எரிவாயு விலை 30% உயர்ந்துள்ள நிலையில், பிரென்ட் கச்சா எண்ணெய் 7% அதிகரித்துள்ளது.

இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்துள்ளனர். இது தொடர்பாக ஐஎஸ்என்ஏ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் சோமாயே ரஃபீ, ‘‘போக்குவரத்து, எரிசக்தி, உணவுப் பாதுகாப்புக்கான ஒரு பாதுகாப்பான பாதையாக ஹார்முஸ் ஜலசந்தி பயன்படுத்தப்பட வேண்டுமானால், ஈரானுக்கு சுங்கக் கட்டணம் செலுத்தும் ஒரு திட்டத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் முன்னெடுத்து வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி:

கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 93.26 என வீழ்ச்சி கண்டது உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி நிலவியது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 2,496.89 புள்ளிகள் சரிந்து 74,207.24-ல் நிலைகொண்டது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 775.65 புள்ளிகள் சரிந்து 23,002.15 ஆக இருந்தது.

கச்சா எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்துள்ளதன் எதிரொலியாக, பெட்ரோல் - டீசல் விலையும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்ட பதிவில், “ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு மையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது. இஸ்ரேலின் தாக்குதலில் கத்தார் நாட்டுக்கு எந்த தொடர்பும் கிடையாது. இது ஈரானுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால், இஸ்ரேலின் சவுத் பார்ஸ் எரிவாயு மையம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக கத்தாரின் எல்என்ஜி எரிவாயு மையம் மீது ஈரான் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியிருக்கிறது. கத்தார் எல்என்ஜி மையம் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், ஈரான் பேரழிவைச் சந்திக்கும்” என்று குறிப்பிட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

<div class="paragraphs"><p>கத்தாரின் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையம் </p></div>
ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: தங்கம் விலை ரூ.5,360 குறைவு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in