

டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையேயான 2 வார கால இடைக்கால போர் நிறுத்தம் நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், காலவரையின்றி சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்தார். ஆனால், ஈரான் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில், ஈரான் சரக்குக் கப்பல்கள் சிலவற்றை அமெரிக்கா துப்பாக்கிச் சூடு நடத்தி சிறைபிடித்துள்ளது. மேலும், ஈரான் துறைமுகங்களை தொடர்ந்து முற்றுகை நிலையில் வைத்திருக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனை வருவாய் முடங்கியுள்ளது.
அமெரிக்காவின் நெருக்கடிக்கு பதிலடி அளிக்கும் வகையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியைக் கடக்க முயன்ற 3 சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இத்தகவலை சரக்குக் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் இங்கிலாந்தின் யுகேம்டிஓ மையம் தெரிவித்துள்ளது.
இதில் ஒரு சரக்குக் கப்பல் சேதம் அடைந்துள்ளது. ஆனால், ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தத் தாக்குதல் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தங்கள் அனுமதியின்றி எந்தக் கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்ல முடியாது என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.
இந்தியக் கப்பல்: முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த 18-ம் தேதி இந்தியக் கொடியுடன் வந்த 2 கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்தியாவின் கண்டனத்தை தொடர்ந்து இந்த தாக்குதல் தற்செயலானது என ஈரான் விளக்கம் அளித்தது.
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கொடி ஏந்திய மேலும் 14 கப்பல்கள் சிக்கியுள்ளன. இந்தக் கப்பல்களை பத்திரமாக வெளியேற்ற மத்திய அரசு முயன்று வருகிறது. இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி அருகில் 2 கப்பல்களைக் ஈரான் நேற்று கைப்பற்றியது.
அந்தக் கப்பல்கள் ஈரானின் ஐஆர்ஜிசி கடற்படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவை ஈரானுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் ஈரானிய அரசுத் தொலைக்காட்சி பின்னர் செய்தி வெளியிட்டது.
அந்தக் கப்பல்கள் எம்எஸ்சி பிரான்செஸ்கா மற்றும் எபமினோண்டாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளன. கடல் போக்குவரத்து தரவுகளின்படி, லைபீரியக் கொடியுடன் கூடிய டேங்கர் கப்பலான எபமினோண்டாஸ், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. மற்றொரு கப்பல் இலங்கை நோக்கி சென்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.