ரியாத்தில் யுஎஸ் தூதரகத்தை தாக்கிய ட்ரோன் - வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல்

ரியாத்தில் யுஎஸ் தூதரகத்தை தாக்கிய ட்ரோன் - வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல்

Published on

டெல் அவிவ்: வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இஸ்​ரேலும் அமெரிக்கா​வும் இணைந்து ஈரான் மீது கடந்த சனிக் கிழமை வான்​வழி தாக்​குதல் நடத்​தின. இதில் ஈரானின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உட்பட உயர்​மட்​டத் தலை​வர்​கள் பலர் உயி​ரிழந்​தனர்.

இதையடுத்​து, இஸ்ரேல் மட்டுமல்லாது அமெரிக்க ராணுவ ​தளங்கள் அமைந்​துள்ள கத்தார் மற்​றும் பஹ்ரைன் தலைநகரங்கள், ஐக்​கிய அரபு அமீரகத்​தின் அதிக மக்​கள் தொகை கொண்ட நகரங்​கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

இதை அமெரிக்க வான் தடுப்பு அமைப்புகள் இடைமறித்து தாக்கி அழித்து வருகின்றன. இதனால், துபாய், தோஹா, அபு​தாபி மற்றும் மனாமா உள்​ளிட்ட நகரங்​களில் அவ்​வப்​போது வெடிச் சத்தங்​கள் கேட்​டுக் கொண்டு இருக்​கின்​றன. ஈரானின் தாக்​குதல் நேற்று மூன்​றாவது நாளை எட்​டி​யுள்ள நிலை​யில், இஸ்ரேலின் டெல் அவிவ் மற்​றும் ஜெருசலம் பகு​தி​களில் பல ஏவு​கணை​கள் இடைமறித்து அழிக்​கப்​பட்​டன.

ஈராக்​கில், எர்​பில் விமான நிலை​யத்​துக்கு அருகே 2 ட்ரோன்​கள் வான் பாது​காப்பு அமைப்​பு​களால் சுட்டு வீழ்த்​தப்​பட்​டதை நேரில் பார்த்​த​தாக ஏஎப்பி புகைப்​படக் கலைஞர் தெரி​வித்​துள்​ளார். ஈரான் தாக்குதல் காரணமாக, வளை​குடா நாடு​களில் உள்ள விமான நிலை​யங்​கள், துறை​முகங்​கள் முதல் குடி​யிருப்​பு​கள் சேதமடைந்துள்​ளன. பஹ்ரைனின் மனா​மா​வில் உள்ள விமான நிலை​யத்​தில் ட்ரோன்​கள் தாக்​கிய​தில் சிறிய அளவி​லான சேதம் ஏற்​பட்​டது.

இதுபோல ஐக்​கிய அரபு அமீரகத்​தில் தாக்​குதல் கடுமை​யாக இருந்​தது. துபா​யின் குடி​யிருப்​புப் பகு​தி​களில் ட்ரோன் பாகங்​கள் விழுந்​த​தில் இரு​வர் காயமடைந்​தனர். சனிக்​கிழமையன்று ‘தி பாம்' மற்​றும் ‘புர்ஜ் அல் அராப்' ஓட்​டல் போன்ற முக்​கிய இடங்களில் தீ விபத்​துகள் ஏற்​பட்​டன. அபு​தாபி விமான நிலை​யம் மீதான தாக்​குதலில் ஒரு​வர் உயி​ரிழந்​தார் மற்​றும் 7 பேர் காயமடைந்​தனர். மற்​றொரு​வர் இடி​பாடு​களில் சிக்கி உயிரிழந்தார்.

துபாயில் விமான சேவை தொடக்கம்: இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு பகுதி அளவிலான விமான சேவை தொடங்கியது. படிப்படியாக விமான சேவை சீராகும் என்று அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரியாத்தில் தாக்குதல்:

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இந்த தாக்குதலை சவூதி பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்துக்குள் கரும்புகை சூழ்ந்ததோடு, கட்டிடத்தின் சில பகுதிகள் தீயில் எரிந்தன. தூதரக வளாகத்தில் பரவிய தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரியாத்தில் உள்ள இந்த அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பாதுகாப்பு கருதி ஏற்கெனவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் அச்சுறுத்தல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டு, ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியாத்தில் யுஎஸ் தூதரகத்தை தாக்கிய ட்ரோன் - வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல்
வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்து தாக்குவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in