இஸ்ரேல் பிரதமரை குறிவைத்து ஈரான் தாக்குதல் - என்ன ஆனார் பெஞ்சமின் நேதன்யாகு?

இஸ்ரேல் பிரதமரை குறிவைத்து ஈரான் தாக்குதல் - என்ன ஆனார் பெஞ்சமின் நேதன்யாகு?
Updated on
2 min read

தெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை குறிவைத்து கெய்பர் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர் என்ன ஆனார் என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த சனிக்கிழமை தாக்குதலை தொடங்கின. இதில், அந்த நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். ஈரானின் பாதுகாப்பு அமைச்சர், ராணுவத் தளபதி உட்பட 40-க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை அடுத்து, ஈரான் பதிலடியை கொடுக்கத் தொடங்கியது. ஈரானுக்கு ஆதரவாக, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கியது. இதையடுத்து, ஈரான் மற்றும் லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தகைய போக்குகள் காரணமாக போர் விரிவடைந்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “சயோனிச ஆட்சியின் கொடூர பிரதமரின் அலுவலகமும், அந்த ஆட்சியின் வான்படை தளபதியின் தலைமையகமும் குறிவைத்து தாக்கப்பட்டன. ‘கெய்பர்’ (Kheibar) ஏவுகணைகளைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பெஞ்சமின் நேதன்யாகுவின் நிலை குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலின் டெல் அவீவ், ஹைஃபா, கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட இடங்களில் உள்ள இலக்குகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு, “பத்தாவது அலை” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து, ஜெருசலேம் வானில் வெடிச் சத்தங்கள் கேட்டதாக ஏஎஃப்பி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இடைக்கால பாதுகாப்பு அமைச்சர் நியமனம்:

அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உயிரிழந்த நிலையில், அவருக்குப் பதிலாக புதிதாக இடைக்கால பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால பாதுகாப்பு அமைச்சராக புரட்சிகர காவல் படை ஜெனரல் மஜித் எப்னெல்ரெசாவை அதிபர் மசூத் பெசஸ்கியான் நியமித்துள்ளதாக அதிபரின் தகவல் தொடர்பு துணை அதிகாரி மெஹ்தி தபதபாய் தெரிவித்துள்ளார்.

இந்தியர் உயிரிழப்பு:

ஓமன் வளைகுடாவில் மார்ஷல் தீவுகள் கொடி ஏற்றப்பட்ட எண்ணெய் கப்பல் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட ட்ரோன் படகு மோதியதில் கப்பலில் இருந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். ஓமன் நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ள தகவலில், முஸ்கட் கடற்கரைக்கு அருகில் இந்த தாக்குதல் நடைபெற்றது. தாக்கப்பட்ட கப்பல் “MKD VYOM” என அடையாளம் காணப்பட்டது. உயிரிழந்தவர் இந்தியர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடும் போராட்டங்கள்:

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, வடக்கு பாகிஸ்தானில் உள்ள கில்ஜிட் மற்றும் ஸ்கார்டு நகரங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் பலர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, பாகிஸ்தான் அரசு அங்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளது. மேலும், மூன்று நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகம் மற்றும் கராச்சி, லாகூரில் உள்ள துணை தூதரகங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக விசா வழங்கல் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெஷாவரில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் உட்பட அமெரிக்கத் தூதரக வளாகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமரை குறிவைத்து ஈரான் தாக்குதல் - என்ன ஆனார் பெஞ்சமின் நேதன்யாகு?
அமெரிக்கா, இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in