

இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா ராணுவத் தளத்தின் ஒரு காட்சி
தெஹ்ரான்: இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க-பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தின் மீது ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க - பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தின் மீது ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானில் இருந்து 4,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த இலக்கை, இரண்டு ஏவுகணைகளுமே தாக்கவில்லை. அதேநேரத்தில், முன்பு நினைத்ததைவிட அதிக தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளன என்பதை இந்த ஏவுகணைச் சோதனை உணர்த்துகிறது. எனினும், இது குறித்து பென்டகன் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
ஏவுகணைகளில் ஒன்று பறக்கும்போதே செயலிழந்தது. மற்றொன்று அமெரிக்கப் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இடைமறிப்பு ஏவுகணையால் குறிவைக்கப்பட்டது. எனினும், அந்த ஏவுகணை தாக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாகோஸ் தீவுகளில் உள்ள டியாகோ கார்சியா தற்காப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா பயன்படுத்த பிரிட்டன் அனுமதித்துள்ள இரண்டு தளங்களில் ஒன்றாகும். ஆப்கனிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் உட்பட ஆசிய நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய மையமாக இந்த தளம் விளங்குகிறது. இங்கு அமெரிக்கப் படைகள், குண்டுவீச்சு விமானங்களையும் பிற உபகரணங்களையும் நிலை நிறுத்தி உள்ளன.
இதனிடையே, ஹிஸ்புல்லா குழுக்களை நசுக்கும் நோக்கில், அதன் ராணுவ பிரிவுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. தெற்கு லெபனானில் உள்ள ஒரு சுகாதார மையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். மேலும் நான்கு பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர்.
இஸ்ரேல், சிரிய நாட்டின் ராணுவ முகாம்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி உள்ளது. இதற்கு சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஸ்வைடா மாகாணத்தில் உள்ள ட்ரூஸ் சமூகத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக தெற்கு சிரியா மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.