ஈரான் உச்ச தலைவர் கமேனியின் உடல் நல்லடக்கம்

அமெரிக்காவுடன் மீண்டும் மோதல்
ஈரான் உச்ச தலைவர் கமேனியின் உடல் நல்லடக்கம்
Updated on
2 min read

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈ​ரானின் மறைந்த உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்​லா​யிரக்​கணக்​கான மக்​கள் இறுதி அஞ்​சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் உச்ச தலை​வ​ராக இருந்த அயத்​துல்லா அலி கமேனி கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்​திய கூட்​டுத் தாக்​குதலில் கொல்​லப்​பட்​டார். அவருடன் அவரது மூத்த மகள், மரு​மகன், மரு​மகள், 14 மாத பேத்தி ஆகியோ​ரும் கொல்லப்பட்டனர். போர் தொடர்ந்​த​தால் அவர்​களின் இறு​திச் சடங்கு நடை​பெற​வில்லை.

இந்த சூழலில் போர் பதற்​றம் தணிந்​த காரணத்தால், ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் கமேனி உள்ளிட்ட உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு இறு​திச்​சடங்கு நிகழ்​வு​கள் கடந்த வாரம் தொடங்​கின. அவர்​களின் உடல் பல்​வேறு நகரங்​களுக்கு எடுத்​துச் செல்​லப்​பட்டது.

இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று (ஜூலை 10) ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா நினை​விடத்​தில் முறைப்​படி அவரது உடலை ஈரான் நல்​லடக்​கம் செய்தது. அந்த பகுதியில் திரளான மக்கள் திரண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

ஈரான் - அமெரிக்கா மீண்டும் மோதல்

ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த மாதம் 17-ம் தேதி போர் நிறுத்தம் தொடர்​பான அமைதி ஒப்​பந்​தம் ஏற்​பட்​டது. அந்த ஒப்பந்தத்​தில் 14 அம்​சங்​கள் இடம்​பெற்​றன. இரு தரப்பு போர் நிறுத்தம், கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்​துக்கு ஹார்​முஸ் ஜலசந்தி திறப்​பு, ஈரான் மீதான தடைகள் நீக்​கம் உட்பட 14 அம்​சங்​கள் அமைதி ஒப்​பந்​தத்​தில் இடம்​பெற்​றன.

இதையடுத்​து, ஹார்​முஸ் ஜலசந்தி கப்​பல் போக்​கு​வரத்​துக்கு திறந்து விடப்​பட்​டது. எனினும், ஈரான் கடலோர பகு​தி​யில் உள்ள வழித்​தடத்​தில்​தான் செல்ல வேண்​டும், ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடந்து சென்​றால் தாக்​குதல் நடத்தப்படும் என்று ஈரான் தொடர்ந்து எச்​சரிக்கை விடுத்து வந்​தது.

இந்​நிலை​யில், மார்​ஷல் தீவு எண்​ணெய் கப்​பல் அல் ரெஹா​யத், சவுதி கப்​பல் வெட்​யான், லைபீரியா கப்​பல் சைப்​ரஸ் ப்ராஸ்​பெரிட்டி ஆகிய 3 எண்​ணெய் கப்​பல்​கள் ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடந்தன. அவற்​றின் மீது ஈரான் ராணுவத்​தினர் திடீரென தாக்​குதல் நடத்​தினர்.

அதற்கு பதிலடி​யாக ஈரானின் துறை​முக நகரங்​கள் பந்​தர் அப்​பாஸ், சிரிக், கேஷ்ம்ப் தீவு உட்பட 80 இடங்​களில் அமெரிக்கா நேற்று முன்​தினம் குண்டு வீசி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் வான் பாது​காப்​புக் கருவி​கள், ரேடார் மையங்​கள், ஏவு​கணை தளங்​கள், 60-க்​கும் மேற்பட்ட கடற்​படை படகு​கள் அழிக்​கப்​பட்​ட​தாக அமெரிக்க ராணுவ கட்​டுப்​பாட்டு மையம் சென்ட்​காம் தெரி​வித்​தது.

அமெரிக்​கா​வின் தாக்​குதலுக்​குப் பதிலடி​யாக பஹ்ரைன், குவைத் மற்​றும் இதர வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் வளை​குடா நாடு​களில் மீண்​டும் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் உடல் நல்லடக்கம்
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in