

டெஹ்ரான்: குவைத் நாட்டின் சுவைக் துறைமுகத்தில், அமெரிக்க கடற்படையின் 6 சிறியரக கப்பல்கள் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அமெரிக்க வீரர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் ஈரான் ராணுவம் கூறியுள்ளது.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேசன் ட்ரூ பிராமிஸ்’ என்ற பெயரில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. குவைத் நாட்டின் சுவைக் துறைமுகம் மீது நேற்று கதிர் 389 ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. 1,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் இந்த ஏவுகணை, அமெரிக்க கடற்படையின் 6 சிறிய ரக கப்பல்களை தகர்த்ததாக கூறப்படுகிறது. இந்த கப்பல்கள் கடற்கரையில் வீரர்களை தரையிறக்கும் வசதி கொண்டவை.
இவற்றில் 3 கப்பல்கள் மூழ்கி விட்டதாகவும், 3 கப்பல்கள் தீப்பற்றி எரிவதாகவும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் ஈரான் ராணுவம் கூறியுள்ளது. இதை அமெரிக்கா இன்னும் உறுதி செய்யவில்லை. மேலும், குவைத்தில் அல்-கார்ஜ் என்ற
இடத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் பல சேதம் அடைந்ததாகவும் ஈரான் ராணுவம் கூறியுள்ளது.
போர் விமானம் மீது.. ஈரான் நாட்டின் ஃபார்ஸ் மாகாணத்தில் நேற்று தாக்குதல் நடத்த வந்த அமெரிக்க விமானப்படையின் எப்-16 போர் விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் ராணுவம் கூறியுள்ளது. அதேபோல், துபாயில் அமெரிக்க ராணுவத்தின் ட்ரோன் பிரிவினர் தங்கியிருந்த இடம், துபாய் ஓட்டல் ஒன்றின் மீதும் ‘கமிக்காசி’ என்ற ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் ராணுவம் கூறியுள்ளது.
இங்கு 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் தங்கியிருந்தனர். இதில் காயம் அடைந்த அமெரிக்க வீரர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் துபாய் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் விமான நிலைய ரேடார் சேதம் அடைந்ததாகவும் ஈரான் ராணுவம் கூறியுள்ளது. இதை குவைத் விமான போக்குவரத்து செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் ஏற்கெனவே விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனங்கள் ஏராளமான பயணங்களை ரத்து செய்துள்ளன. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.