

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள புஜாயிரா துறைமுகத்தின் மீது ட்ரோன்கள் மூலம் ஈரான் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அங்கு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய போர் நேற்று 15-வது நாளாக நீடித்தது. இப்போரில் ஈரானின் ராணுவ தளங்கள், போர்க் கப்பல்கள், விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.
இதனிடையே உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை தடுக்கக் கூடாது என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள புஜாயிரா துறைமுகத்தின் மீது ஈரான் படைகள் ட்ரோன்கள் மூலம் கடும் தாக்குதல் நடத்தின. துறைமுகம் மீது ட்ரோன்களால் ஈரான் படைகள் தாக்கியபோது அமெரிக்கப் படைகள் அந்த ட்ரோன்களை இடைமறித்துத் தாக்கின. இதன் காரணமாக கீழே விழுந்த ட்ரோன்களின் பாகங்களால் அங்கிருந்த எண்ணெய்க் கிடங்குகள் தீப்பிடித்து எரிந்தன. ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே இந்த முக்கியமான புஜாயிரா துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் கப்பல்களுக்கு எண்ணெய் வகைகளை ஏற்றிக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த புஜாயிரா துறைமுகத்தின் வழியாகத்தான் ஹார்முஸ் ஜலசந்திக்கு கப்பல்கள் சென்று கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் அறிவிப்பு: இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் நேற்று கூறியதாவது: அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கு வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் மகுடமாகத் திகழும் கார்க் தீவில் அனைத்து ராணுவ இலக்குகளையும் அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக அழித்துள்ளது.
மனிதநேயம் மற்றும் கண்ணியம் கருதி அந்த தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை அழிக்காமல் விட்டுவிட நான் முடிவெடுத்துள்ளேன். ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் தடையின்றியும் பாதுகாப்பாகவும் செல்வதற்கு ஈரானோ அல்லது வேறு எவரேனும் இடையூறு செய்தால், எனது இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்வேன். நாங்கள் தாக்க விரும்பும் எந்தவொரு இலக்கையும் தற்காத்துக் கொள்ளும் திறன் ஈரான் நாட்டிடம் துளியும் இல்லை. ஈரானின் ராணுவமும், இந்தத் தீவிரவாத ஆட்சியுடன் தொடர்புடைய மற்ற அனைவரும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, தங்கள் நாட்டில் எஞ்சி இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களுக்கான பாதுகாப்பை விரைவில் அமெரிக்க கடற்படை வழங்கும் இவ்வாறு அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறி உள்ளார்.
கார்க் தீவு மீது தாக்குதல்: ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றும் கார்க் தீவு மீது அமெரிக்கா சரமாரியாக குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது. பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவு, ஈரானின் எண்ணெய் முனையமாக செயல்படுகிறது. அங்குதான் பெட்ரோலியப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை இந்த தீவு கையாளுகிறது.
மேலும் அந்நாட்டின் எரிசக்தித் துறைக்கு ஒரு மிக முக்கிய மையமாகவும் இது திகழ்கிறது. ஈரானுக்கு முக்கியம் வாய்ந்த அந்த தீவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி அங்குள்ள ராணுவ உள் கட்டமைப்புகள், கடற்படை தளம், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை அழித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார்க் தீவு பாரசீக வளைகுடாவின் அனாதை முத்து என்றும் அழைக்கப்படுகிறது.
கண்டனம்: ஈரானின் கார்க் தீவு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்கப் பங்குகளைக் கொண்ட அல்லது அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் செயல்படும் எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.