

பிரதமர் நரேந்திர மோடி
குவாஹாட்டி/கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொடுங்கோல் ஆட்சி அகற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அசாமின் கோக்ரஜர், குவாஹாட்டி நகரங்களில் நேற்று நலத்திட்ட விழாக்கள் நடைபெற்றன. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இரு விழாக்களிலும் ரூ.24,250 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து அசாமின் சில்சார் நகரில் நேற்று நடந்த நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று ரூ.23,550 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் அப்போதைய காங்கிரஸ் அரசு அக்கறை செலுத்தவில்லை. மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வடகிழக்குக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
செமி கண்டக்டர் உற்பத்தி உட்பட பல்வேறு தொழில்கள் அசாமில் தொடங்கப்பட்டு உள்ளன. ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில் போர்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் உலகம் முழுவதும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பாதிப்புகளை குறைக்க மத்திய அரசு அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் காங்கிரஸ் கட்சி பொறுப்புடன் செயல்படவில்லை.
தற்போதுகூட நாட்டின் நலனுக்கு எதிராக அந்த கட்சி செயல்படுகிறது. மக்களிடையே பொய்கள், வதந்திகளை பரப்பி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சில அந்நிய சக்திகளின் ஊதுகுழலாக காங்கிரஸ் செயல்படுகிறது. அந்த கட்சி குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதைத் தொடர்ந்து மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.18,680 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார், விழாவில் அவர் பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் சாலைகள், உள்கட்டமைப்புகள் தொடர்பாக பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்தின் 6 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. கொல்கத்தா, ஹால்டியா துறைமுகங்களின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஒட்டுமொத்த கிழக்கு இந்தியாவும் வளர்ச்சி அடையும்.
மேற்கு வங்கத்தில் தற்போது கொடுங்கோல் ஆட்சி (திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி) நடைபெற்று வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த கொடுங்கோல் ஆட்சி அகற்றப்படும். மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இன்றைய பொதுக்கூட்டத்தில் மக்கள் பங்கேற்பதை தடுக்க மிகப்பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. ஆனால் அவற்றை தாண்டி பெருந்திரளான மக்கள் இங்கு கூடியுள்ளனர். விரைவில் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.