

வான்கூவர்: ஏர் இந்தியா விமானம் ஒன்று கடந்த டிசம்பர் 23-ம் தேதி கனடாவின் வான்கூவர் நகரிலிருந்து டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்தது.
ஏர் இந்தியா விமான பைலட் மது பாட்டில் வாங்கும்போது அவர் மீது மது வாடை வீசியதையோ அல்லது ஒயின் அருந்தியதையோ கவனித்த வான்கூவர் விமான நிலைய ஊழியர் ஒருவர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பைலட்டுக்கு மூச்சு பகுப்பாய்வு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் அவர் மது அருந்தியது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து, அவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி உள்ளனர். விமானம் ஓட்டுவதற்கான தகுதியை பைலட் இழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ஏர் இந்தியா நிர்வாகம், அவரை பணியிலிருந்து தற்காலிகமாக விடுவித்ததுடன் வேறு ஒரு பைலட்டை பணியில் ஈடுபடுத்தி விமானத்தை அனுப்பி வைத்துள்ளது.
இதனால் அந்த விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமானதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் நடந்த சில தினங்களுக்குப் பிறகு, அந்த பைலட் டெல்லி திரும்பினார். அவரிடம் ஏர் இந்தியா நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், “விதிமுறைகள் மற்றும் சட்டத்தை மீறும் எந்தவொரு செயலையும் ஏர் இந்தியா சகித்துக் கொள்ளாது. பயணிகளின் பாதுகாப்புக்கு நாங்கள் முதல் முன்னுரிமை வழங்குகிறோம். பைலட் மீதான புகார் உறுதி செய்யப்பட்டால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.