

கடந்த 9 ஆண்டுகளாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கோலோச்சி வந்த 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' வெப் தொடர், அதன் ஐந்தாவது சீசனின் இறுதி எபிசோடுடன் ஒரு நெகிழ்ச்சியான முடிவுக்கு வந்துள்ளது.
இந்த சீசன் முழுக்க முழுக்க ஹாக்கின்ஸ் நகரைக் காப்பதற்கான இறுதிப் போராகவே இருந்தது.வில்லன் வெக்னா ஹாக்கின்ஸ் நகரத்துடன் சேர்த்து உலகையும் அழிக்க நினைக்கும் போது, லெவன் மற்றும் அவளது நண்பர்கள் குழு எப்படி அவர்களை எதிர்கொள்கிறார்கள் என்பதே இந்த எபிசோடின் மையக் கதை.
'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' தொடரின் மிகப்பெரிய பலமே அதன் நாஸ்டால்ஜியா தன்மை தான். 80-களின் பின்னணி இசை மற்றும் காட்சியமைப்பு இந்த சீசனிலும் மிக நேர்த்தியாகக் கையாளப்பட்டுள்ளது. நண்பர்களுக்கிடையேயான பிணைப்பு, குடும்ப உறவுகள், அதிரடி ஆக்ஷன், உணர்வுபூர்வ தருணங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் முதிர்ச்சி சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது.
இந்த எபிசோட் வெளியாவதற்கு முன்பு சமூக வலைதளங்களில் இதில் சோகமயமான க்ளைமாக்ஸ் இருக்கலாம் என்று ரசிகர்கள் தியரிகளை எழுதி வந்தனர். ஆனால் டஃபர் பிரதர்ஸ் அத்தகைய ரிஸ்க் எதுவும் எடுக்காமல் ரசிகர்களுக்குப் பிடித்தமான விஷயங்கள் எதையும் மாற்றாமல், அவர்கள் எதிர்பார்க்கும் ஒரு நிறைவான முடிவை தந்துள்ளனர். இது ஒருபுறம் திருப்தியைத் தந்தாலும், மறுபுறம் 2 மணி நேரம் ஓடும் கதையில் பெரிய திருப்பங்கள் இல்லாமல் இருந்ததும் லேசான ஏமாற்றத்தை தந்தது.
முதல் சீசனில் குழந்தைகளாக அறிமுகமானவர்களை கிட்டத்தட்ட இத்தனை ஆண்டுகாலம் எந்த இடையூறுகளும் இன்றி தாக்குப் பிடித்து கொண்டு வந்ததற்கே இயக்குநர்களை பாராட்டலாம். 2 மணி நேரம் ஓடும் எபிசோடில் முழுக்க முழுக்க பரபரப்பை மட்டுமே வைத்து ஒப்பேற்றாமல், இரண்டாம் பாதி முழுக்க உணர்வுபூர்வ காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு.
அதிலும் 2016 முதல் இந்த தொடரை, கதாபாத்திரங்கள் குழந்தைகளாக இருந்த காலம் முதல் பார்த்து வருபவர்களுக்கு, இந்த முடிவு மிகவும் எமோஷனலாக, கண்கலங்க வைக்கும் வகையில் இருக்கும். சிவப்பு நிற பின்னணியில், 80களின் ரெட்ரோ இசையுடன் ஹாக்கின்ஸ் உலகத்தை இனி பார்க்க முடியாது என்பதே ரசிகர்களுக்கு மனதை அழுத்தக் கூடிய விஷயமாகும்.
மொத்தத்தில், 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' இறுதி எபிசோட் ஒரு சாகசப் பயணத்தின் உணர்வுபூர்வ பிரியாவிடை. சில தொய்வுகள், கேள்விகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்த இறுதிகட்டம் ரசிகர்களுக்கு ஒரு திருப்திகரமான, அழகான அனுபவத்தைத் தந்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் காணலாம்.