

வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் கரோலின் லீவிட்
வாஷிங்டன்: இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 18 சதவீதமாக குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமெரிக்கா பார்க்கிறது. இதைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதில்லை என இந்தியா உறுதி அளித்துள்ளது.
மேலும், அமெரிக்கா, வெனிசுலா நாடுகளிடமிருந்து இனி கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும். ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெயை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல் அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யும் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. வெனிசுலாவிடம் இருந்தும் இந்தியா, கச்சா எண்ணெயை வாங்க முடியும். இதனால் அமெரிக்க பொருளாதாரம் மேலும் பலன் அடையும்.
இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் இறுதி செய்துள்ளார். இதற்காக இந்தியப் பிரதமர் மோடியுடன் அவர் நேரடியாகவே பேசி உள்ளார். மேலும், அமெரிக்க எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விவசாயப் பொருட்களை வாங்குவதற்காக இந்தியா 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு செலவிடவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.