போராட்டக் களத்தில் எடுக்கப்பட்ட தேசியக் கொடி புகைப்படம்: அகற்ற மறுத்த பிரியங்கா மகன் ரெஹான்

ரெஹான் வதேரா

ரெஹான் வதேரா

Updated on: 
2 min read

புதுடெல்லி: டெல்லியின் பிகானேர் ஹவுஸில் பிரியங்காவின் மகன் ரெஹான் வதேரா புகைப்படக் கண்காட்சி நடத்தினார். இதில், தேசியக்கொடி உடனான போராட்டக் காட்சிகளை அகற்ற மறுத்து நிர்வாகம் மீது குற்றம் சுமத்தி உள்ளார்.

காங்கிரஸ் தலைவரான பிரியங்கா காந்தி வதேரா மற்றும் ராபர்ட் வதேரா தம்பதியரின் மகன் ரெஹான் வதேரா. புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது அவற்றுடன் தனிப்பட்ட முறையில் கண்காட்சிகளும் நடத்துகிறார்.

அந்த வகையில், நேற்று ராஜஸ்தான் அரசின் பிகானேர் ஹவுஸ் கட்டிடத்தில் தனது கலை மற்றும் புகைப்படக் கண்காட்சியை நடத்தினார். வரும் ஞாயிறு வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், எஸ்ஐஆர் மீதான மாணவர் போராட்டங்கள் மற்றும் பிற ஆர்ப்பாட்டங்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

இவற்றில் போராட்டக் காட்சியின் புகைப்படங்களை அகற்ற பிகானேர் ஹவுஸ் நிர்வாகம் ரெஹானுக்கு அறிவுறுத்தி உள்ளது. இவற்றை அகற்றவில்லை எனில் அவரது புகைப்படக் கண்காட்சி ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்திருந்தது.

இதனால், வேறுவழியின்றி 74 புகைப்படங்களை அகற்றிய ரெஹான் அவற்றில் ஒரு புகைப்படத்தை மட்டும் அகற்ற மறுத்துள்ளார். இதில், தேசியக்கொடியும் இடம்பெற்றதால் அவற்றை அகற்றுவது கொடியை அவமதிப்பாகும் என ரெஹான் காரணம் கூறியுள்ளார்.

தற்போது வெறும் 40 புகைப்படங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் ரெஹான், பிகானேர் நிர்வாகம் மீது குற்றம் சுமத்தி இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஐந்து மணி நேரத்திற்கு முன்பு, பிகானேர் ஹவுஸ் நிர்வாகம் எனது ‘நோ ஐடியா இஸ் ஃபைனல்’ என்ற கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கலைப் படைப்புகளில் பெரும்பகுதியை நீக்க வற்புறுத்தியது.

இந்தப் புகைப்படங்கள் டெல்லியில் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களைக் காட்டுகின்றன. வெளிப்படையாகவே, இந்த உள்ளடக்கம் அவர்களுக்கு ஆட்சேபனைக்குரியதாகத் தெரிகிறது.

மேலும், இந்திய மூவர்ணக் கொடி இடம்பெற்றிருந்த புகைப்படங்களை நீக்குமாறும் அவர்கள் என்னிடம் கேட்டனர். நான் அதற்கு மறுத்துவிட்டேன். இந்தியக் கொடி இருக்கும் புகைப்படத்தை நான் அகற்ற மாட்டேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைக்கு இந்தக் கண்காட்சி ஒரு பகுதியாக மட்டுமே தொடரும் என்றும், தேவைப்பட்டால், வேறு இடத்தில் போராட்டங்கள் குறித்த அனைத்து புகைப்படங்களையும் அங்கு காட்சிப்படுத்துவேன் என்றும் ரெஹான் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை அர்த்தமற்றது எனக் குறிப்பிட்டு ரெஹானின் தாய் பிரியங்கா தனது பதிவில், “நாடு முழுவதும் இளைஞர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டு வருகிறது. இன்று இந்த கலைஞர் என்றால், நாளை மற்றொரு கலைஞராக இருக்கலாம். மகனின் புகைப்படங்கள் யாருக்கும் எதிரான கருத்து அல்ல. அவை போராட்டங்களின் காட்சிப் பதிவுகள் மட்டுமே’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரச்சனையில் பிகானேர் ஹவுஸ் நிர்வாகம் செய்தியாளர்களிடம் கருத்துக் கூற மறுத்துள்ளது.

இதன் மீது மூத்த காங்கிரஸ் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் விளம்பரத் துறையின் தலைவருமான பவன் கேரா கருத்து கூறியுள்ளார். இதில் அவர், ரெஹான் வதேராவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸின் பவன் கேரா கூறுகையில், “ஒரு கலைக் கண்காட்சியின் மீது இத்தகைய தணிக்கையை விதிப்பதில் என்ன குற்றம் உள்ளது? மூவர்ணக் கொடி கூட தணிக்கையிலிருந்து தப்ப முடியவில்லை என்றால், சிக்கல் கலையில் இல்லை, அதிகாரத்தில் தான் உள்ளது என்று அர்த்தம்.

எஞ்சியிருந்த படங்களில் ஒன்று இந்திய மூவர்ணக் கொடியைக் கொண்ட படம். மத்திய அரசு கருத்துகளுக்கு மட்டுமல்ல, போராட்டங்களுக்கும் அஞ்சுகிறது. இப்போது போராட்டங்கள் தொடர்பான படங்கள் மற்றும் தேசியக் கொடி கூட அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒன்றாக மாறியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

ரெஹானின் கலைக் கண்காட்சி தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, பிகானேர் ஹவுஸ் நிர்வாகம் 74 கலைப் படைப்புகளை நீக்கக் கோரியுள்ளது. அதாவது ஒட்டுமொத்த கண்காட்சியில் பாதியளவு படைப்புகளை ‘அரசியல் சார்ந்தவை’ என்று கூறி நீக்கியுள்ளது.

சமூக வலைதளங்களில், ‘இந்தப் புகைப்படங்கள் வெறும் போராட்டங்களை மட்டுமே காட்டுகின்றன; இதில் ஆட்சேபனைக்குரியதோ அல்லது தூண்டுதல் ஏற்படுத்தக்கூடியதோ எதுவுமில்லை. அப்படியிருக்க, இதில் என்ன தவறு?’ என ரெஹானுக்கு ஆதரவாக கேள்விகள் எழுந்துள்ளன.

<div class="paragraphs"><p>ரெஹான் வதேரா</p></div>
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,240 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in