

ஒட்டாவா: காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடா குடியுரிமை பெற்று அந்நாட்டில் வசித்து வந்தார். தடை செய்யப்பட்ட காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் என்ற அமைப்பின் தலைவராக இருந்த நிஜ்ஜார் தீவிரவாதி என கடந்த 2020-ல் இந்தியா அறிவித்தது.
இந்நிலையில் கடந்த 2023 ஜூனில் கனடாவின் சர்ரே நகரில் முகமூடி அணிந்த இருவரால் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து குற்றம்சாட்டினார். இதை இந்தியா மறுத்தது. இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. எனினும், ட்ரூடோவுக்கு பிறகு வந்த, மார்க் கார்னி தலைமையிலான அரசு மீண்டும் இந்தியாவுடன் தங்கள் உறவை கட்டியெழுப்பத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்தது. தற்போது இந்திய சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், வட அமெரிக்காவில் உள்ள அவரது உதவியாளர் கோல்டி ப்ரார் ஆகியோர் இணைந்து நிஜ்ஜாரை கொலை செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் கனடாவின் ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (ஆர்சிஎம்பி) துணை கமிஷனர் லிசா மோர்லாண்ட் நேற்று கூறுகையில், “இந்திய அரசை இந்த வழக்குடன் இணைக்கும் வகையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மேற்கொள்ளப்பட்ட கைது, பறிமுதல் நடவடிக்கையின் அடிப்படையில் விசாரணை தொடர்கிறது” என்றார்.