

இஸ்லமாபாத்: உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 9 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக சிறை வளாகத்தில் தனது மனைவி, சகோதரியை சந்தித்தார்.
இம்ரான் கானை அவரது சகோதரி நோரீன் நியாசி ஆதியாலா சிறை வளாகத்தில் உள்ள மாநாட்டு அறையில் 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். கடந்த 9 மாதங்களில் இருவரும் சந்தித்தது இதுதான் முதல் முறை. இந்த சந்திப்பின்போது, இம்ரானை மருத்துவமனையில் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது பற்றிய தகவலை அவரது சகோதரி தெரிவித்ததார். அவரது உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார்.
அலிமா கான் மற்றும் உஸ்மா கான் உள்ளிட்ட இம்ரானின் மற்ற சகோதரிகள் மற்றும் அவரது உறவினர் காசிம் ஜமான் ஆகியோரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
மேலும், அவரது கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் சந்திப்பிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் மனைவி புஸ்ரா பிபியுடன் இம்ரான் கான் சிறையில் உள்ள மாநாட்டு அறையில் சந்தித்துப் பேச அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பு சுமார் 30 முதல் 35 நிமிடங்கள் நீடித்தது.
மேலும், ஆதியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள புஸ்ரா பிபியும் தனது குடும்பத்தினரைச் சந்தித்தார். அவரது குழந்தைகள் மூசா மற்றும் முபஷரா மனேகா மற்றும் மைத்துனி மெஹ்ருன்னிசா ஆகியோருடனான அவரது சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் (73), கடந்த 2018 முதல் 2022 வரை பிரதமராக பதவி வகித்தார். அவரது பதவிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2023 முதல் அவர் ராவல்பிண்டியில் உள்ள ஆதியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதை அடுத்து, இம்ரானை 2 நாட்களில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதனிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இம்ரான் கானை வாரந்தோறும் சந்திக்க அவரது குடும்பத்தினர் மற்றும் குடும்ப மருத்துவருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷாஹித் வாஹீத் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.