

வாஷிங்டன்: ஹெச்-1பி விசா ஸ்பான்சர்ஷிப் வழங்குவது நிறுத்தப்பட உள்ளதால் ஊழியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என ஐபிஎம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம், தனது மிகப்பெரிய வணிகப் பிரிவான ‘ஐபிஎம் கன்சல்டிங்’ பிரிவில் பெரும்பாலான பணியிடங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஹெச்-1பி விசா மற்றும் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்று பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதால் இந்த நடவடிக்கை இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் 1,50,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு இயங்கும் ஐபிஎம் கன்சல்டிங் பிரிவையே இந்த முடிவு முதன்மையாகப் பாதிக்கிறது. இருப்பினும், இதனால் அமெரிக்காவில் உள்ள எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற துல்லியமான எண்ணிக்கையை ஐபிஎம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இந்த முடிவால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள், அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியா உட்பட பிற நாடுகளில் உள்ள ஐபிஎம் கிளைகளுக்கு பணி இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும் அல்லது வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பணியை விட்டு விலக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தங்களது முடிவை அறிவிக்க ஊழியர்களுக்கு மூன்று வாரங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பதவி விலகும் ஊழியர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா கட்டுப்பாடுகள் மற்றும் சந்தை மாற்றங்களுக்கு ஏற்பவே இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐபிஎம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.