அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் (MAGA) என்ற முழக்கத்துடன் அதிகாரத்துக்கு வந்தவர் டொனால்டு ட்ரம்ப். ஆனால், சொன்னபடி செய்தாரா என்று தேடும் அளவுக்கு அவர் மீது சாமானிய மக்கள், எதிர்க்கட்சியினர், ஊடகங்கள், சர்வதேச புவி அரசியல் நிபுணர்கள் என்று பல தரப்பினரின் விமர்சனங்கள் நீண்டு கொண்டிருக்கின்றன. அதன் விளைவு தானா என்னவோ, நடந்துமுடிந்த அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள்!
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தவறாக இருக்கலாம் என்றும், குறைந்தபட்சம் செனட் சபையின் கட்டுப்பாட்டையாவது தக்க வைத்துக் கொள்ளலாம் என்றே ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் இடைக்காலத் தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற நிலையை குடியரசுக் கட்சி எதிர்கொண்டது ட்ரம்ப்புக்கே நிச்சயம் அதிர்ச்சிதான்!
குடியரசுக் கட்சியின் தோல்வியானது வழக்கமாக அது தோற்கும் இடங்களைத் தாண்டி, அதன் கோட்டைகளில் எதிரொலித்ததாலேயே இது அக்கட்சியின் வரலாற்றுத் தோல்வியாகக் கூறப்படுகிறது. டெக்சாஸ், தெற்கு கரோலினா போன்ற வலுவான மாகாணங்களையும் கோட்டைவிட்டிருக்கிறது குடியரசுக் கட்சி.
அமெரிக்காவில் இந்த இடைக்காலத் தேர்தல் நடப்பதற்குப் பல மாதங்களுக்கு முன்னர் நடந்த பல்வேறு கருத்துக் கணிப்புகளுமே மக்கள் விலைவாசி உயர்வால் அதிருப்தியடைந்திருந்ததை, ஈரான் மீதான அமெரிக்கப் போரால் சோர்வடைந்திருந்ததை, ட்ரம்ப் நிர்வாகத்தில் மலிந்துபோன ஊழலால் பாதிக்கப்பட்டிருந்ததை தெளிவாகச் சுட்டிக் காட்டின. ஆனால், ட்ரம்ப் அதில் பெரிதும் கவனம் செலுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இது குறித்து, ”2 ஆண்டுகளுக்கு முன்னர் அதிபராகத் தேர்வாகும் முன்னர் ட்ரம்ப், அமெரிக்காவில் சீரான, ஸ்திரமான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வேன் என்றார். ஆனால், அதிபரான பின்னர் அமெரிக்கர்களில் வெகு சிலரே ஆதரித்த கருத்தியலை தூக்கிப் பிடித்துக் கொண்டு பெரும்பான்மை மக்களின் அதிருப்தியை சம்பாதித்தார். வாக்காளர்களை அசட்டை செய்தார். இப்போது அவர்கள் தீர்ப்பெழுதியுள்ளனர்” என்கின்றனர் நிபுணர்கள்.
இதுதவிர இன்னும் சில காரணிகளும் பட்டியலிடப் படுகின்றன. அதில் முக்கியமானதாக உள்ளது, ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ட்ரம்ப்புக்கு இருந்த தொடர்பு. கடந்த காலங்களிலும் சர்ச்சைக்குரிய நபர்களுடன் ட்ரம்ப் இருந்ததுண்டு, ஆபாசமான மற்றும் அவதூறான மொழியை பயன்படுத்தியதுண்டு. ஆனால், எப்ஸ்டீன் கோப்புகளில் இருந்த படங்கள் நடுத்தர வர்க்க அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறப்படுகிறது.
அதேபோல், சட்டவிரோதக் குடியேறிகள் மீதான ட்ரம்ப்பின் நடவடிக்கையும் இந்தத் தேர்தலில் எதிரொலித்துள்ளது. ஹிஸ்பானியர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், ஆசியர்கள் மற்றும் இந்தியர்கள் உட்பட பல்வேறு குடியேற்ற சமூகங்களின் கலவைதான் அமெரிக்கா. ஆனால், சட்டவிரோதக் குடியேறிகள் மீது நடவடிக்கை என்ற பெயரில் ட்ரம்ப் மேற்கொண்ட (ICE) சோதனைகள் குடியரசுக் கட்சியினரிடையேயும் கூட அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன.
பெண்களும் குழந்தைகளும் வீடுகளிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் காவலில் எடுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோல், அமெரிக்க அதிபரின் முதல் ஆண்டில் மட்டுமே அவரது தனிப்பட்ட சொத்து 2.2 பில்லியன் டாலர் அதிகரித்தது. அதாவது ஒரு நாளைக்கு 6 மில்லியன் டாலர் அளவில் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு அதிகரித்தது. ஊழல், லாபி போன்ற பல்வேறு புகார்கள் ட்ரம்ப்பின் மீது மலிந்துள்ளன.
இப்படி பல்வேறு எதிர்ப்புகளாலும் எழுதப்பட்ட இந்தத் தீர்ப்பு, அமெரிக்காவின் அரசியல் வரலாற்றையே புரட்டிப்போடும் அளவுக்கு வலுவானதாக அமைந்துவிட்டதுதான் இப்போது பேசுபொருள் ஆகியிருக்கிறது.
1988-க்குப் பின்னர் டெக்சாஸில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எந்தப் பிரதிநிதியும் வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது அங்கு ஜனநாயகக் கட்சியின் ஜேம்ஸ் டலாரிகோ வெற்றி பெற்றுள்ளார். இதுபோல் அமெரிக்க அரசியல் வரைபடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், இந்த ஆட்சியில் எதிரொலிப்பதோடு மட்டுமல்லாது அடுத்து 2028-ல் வரக்கூடிய அமெரிக்க அதிபர் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
2016-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, ட்ரம்ப்பின் ‘அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன்’ (MAGA) இயக்கத்தின் தீவிர தேசியவாதம் மற்றும் வெறுப்புணர்வில் இருந்து விலகிச் செல்வதா என்பது குறித்து கட்சிக்குள் தீவிர விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சியினர் இந்த இமாலய வெற்றியை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்ற திட்டமிடல்களில் கவனம் செலுத்துவார்கள்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை வாக்காளர்கள் ஆட்சியாளர்களுக்குப் பாடம் புகட்டியுள்ளனர். சிவப்பின் ஆதிக்கம் இருந்த மாகாணங்களில் எல்லாம் நீலம் பூத்திருக்கிறது. இனி எஞ்சிய ஆட்சிக் காலத்தில் வாக்காளர்களை சமாதானப்படுத்துவதில் குடியரசுக் கட்சி கவனம் செலுத்தக்கூடும்.
ஆனால், உலகின் பிற பகுதிகளின் நிலை என்ன? குடியரசுக் கட்சி இடைக்காலத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்திருந்தாலும்கூட, 2028 வரை டொனால்டு ட்ரம்ப் தான் அதிபர். அவருக்கென சில வீட்டோ சக்திகள் உண்டு. போரை அறிவிப்பது, நிறுத்துவது, வெளியுறவுக் கொள்கைகள் போன்ற அதிகாரம் ட்ரம்ப்பிடம் தான் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு ட்ரம்ப் இனியும் கூட வானளாவிய அதிகாரத்துடன் செயல்பட முடியும்.
இடைக்காலத் தேர்தல்களில் அடிவாங்கும்போது ஆளும் கட்சி வெளியுறவுக் கொள்கைகளில் தீவிரம் காட்டுவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னரும் கூட நடந்திருக்கிறது.
உள்நாட்டில் முக்கியமான விவகாரங்கள் மீதான அதிகாரம் சற்றே கைகளை விட்டு நழுவியிருப்பதால், அமெரிக்காவின் உலக நாடுகளுடனான உறவு குறித்து சிந்திக்க குடியரசுக் கட்சிக்கு இப்போது அதிக நேரம் கிடைத்துள்ளது.
இடைக்கால தேர்தல் நெருங்கியபோது, ஈரானுடனான பெரிய ராணுவ மோதலில் இருந்து அதிபர் ட்ரம்ப் பின்வாங்கினார். வரி விதிப்பு யுத்தத்தில் தற்காலிக சமாதானத்தை நாடினார். ஆனால் இப்போது, அரசியல் கட்டுப்பாடுகள் நீங்கிவிட்டதால், அவர் மேலும் கணிக்க முடியாதவராகவும், நிலையற்றவராகவும் மாறக்கூடும் என்று நிபுணர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.
ட்ரம்ப்பின் நடவடிக்கைகளின் மீது நிச்சயமாக குறைந்தபட்ச முட்டுக்கட்டைகளையாவது ஜனநாயகப் பிரதிநிதிகளின் ஆதிக்கம் கொண்ட காங்கிரஸ் செலுத்தும்.
அமெரிக்க நாடாளுமன்றம் அவரைத் தடுக்க முற்றிலும் சக்தியற்றதாக இருக்காது, குறைந்தபட்சம் கோட்பாட்டளவிலாவது. நாடாளுமன்றம் நினைத்தால் ஈரான் போருக்கான நிதியை நிறுத்தலாம். அதிபரிடமிருந்து வரி விதிப்பு அதிகாரத்தையும் பறிக்கலாம். ஆனால், அதற்கு இரு அவைகளிலும் அறுதிப் பெரும்பான்மை தேவைப்படும். ஜனநாயக கட்சி பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அளவுக்கு பெரும்பான்மை அவர்களிடம் இல்லை
அதிபரின் வீட்டோ (Veto) அதிகாரத்தை மீறுவதற்கு அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.
எனவே, இந்த இடைக்காலத் தேர்தல் தோல்வி, ட்ரம்ப்பை கட்டுப்படுத்துவதில் ஜனநாயகக் கட்சியினருடன் இணைவது குறித்து சில குடியரசுக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர்களை தீவிரமாக சிந்திக்க வைக்கும் அளவுக்கு கடுமையானதா என்பதுதான் முக்கிய கேள்வி.
அதிகாரிகளுக்கு செக் வைக்கலாம்..
ஆனால், ஜனநாயகக் கட்சியினரால் நிச்சயமாக செய்ய முடிந்த ஒன்று, ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அதன் சில அதிகாரிகளின் நடத்தை குறித்து அனைத்து விதமான விசாரணைகளையும் தொடங்குவதுதான்.
அதில் முதலில் சிக்குவது, பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஆக இருக்க வாய்ப்புள்ளது. பதவி நீக்க விசாரணையை எதிர்கொள்வதை விட அவர் ராஜினாமா செய்வார் அல்லது பணிநீக்கம் செய்யப்படுவார் என்ற ஊகங்களும் உள்ளன.
இப்படியான சூழலில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வருமா என்பது ட்ரம்ப்பின் முடிவில்தான் உள்ளது. அதிபரின் ஆலோசகர்கள் மாறினாலும், காங்கிரஸில் மாற்றம் வந்தாலும், எவ்விதக் கட்டுப்பாடுகளை ஏற்காத ஓர் அதிபரை அவர்களால் ஒரு அளவுக்கு மேல் மாற்ற முடியாது.
மேலும், இடைக்காலத் தேர்தல் மூலம் அரசியலில் பின்னடைவை சந்தித்து கோபத்தில் உள்ள ட்ரம்ப், தனது கோபத்தை வெளிநாடுகள் மீது காட்டக்கூடும் என்ற நிலைக்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.