

டொராண்டோ: கனடாவின் டொராண்டோ நகரில் இந்திய இளைஞர்கள் குழுவாக இணைந்து பொதுவெளியில் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சமீபகாலமாக கனடாவில் இந்தியர்களின், குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வீடியோ அங்குள்ள உள்ளூர் மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டொராண்டோவின் பரபரப்பான வணிக வளாகப் பகுதி ஒன்றில், இந்திய வம்சாவளி இளைஞர்கள் பலர் ஒன்று கூடி, உரத்த ஒலியில் பஞ்சாபி பாடல்களை ஒலிக்கவிட்டு, பாரம்பரிய ‘பங்க்டா' நடனமாடி கொண்டாடி உள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, விவாதங்கள் தொடங்கின.
இந்த வீடியோவைப் பகிர்ந்த பல கனடா நாட்டு நெட்டிசன்கள், “கனடா நாடு மெல்ல மெல்ல இந்தியாவின் ஒரு காலனியாக மாறி வருகிறது” என்று மிகக் காட்டமாக விமர்சித்துள்ளனர்.
உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பொது ஒழுங்கிற்கு மதிப்பளிக்காமல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அவர்கள் வாதிடுகின்றனர். “நாங்கள் கனடாவில் வாழ்கிறோமா அல்லது இந்தியாவின் ஏதேனும் ஒரு மாநிலத்தில் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது” என்றும் சிலர் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
அதே நேரத்தில், இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வம்சாவளியினரும், பன்முகத்தன்மையை ஆதரிப்பவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கனடா என்பது பல நாட்டு கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஒரு நாடு என்றும், அங்கு தங்களது கலாச்சாரத்தைக் கொண்டாடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே கனடாவில் நிலவி வரும் வீட்டு வசதி தட்டுப்பாடு மற்றும் வேலைவாய்ப்பு நெருக்கடிகளுக்கு, கட்டுப்பாடற்ற வெளிநாட்டு குடியேற்றங்களே காரணம் என்ற கருத்து அந்நாட்டு மக்களிடையே வலுத்து வருகிறது. இத்தகைய இக்கட்டான அரசியல் மற்றும் சமூகச் சூழலில், இந்த நடன வீடியோ அங்குள்ள குடியேற்றவாசிகளுக்கு எதிரான விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.