மெக்சிகோ கால்பந்து மைதானத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 11 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ கால்பந்து மைதானத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 11 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

சலமன்கா: மெக்சிகோவில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நேற்று (ஜன.25) ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயமடைந்தனர்.

வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நடக்கும் குவானாஜுவாடோ மாகாணத்தில் அமைந்திருக்கும் மைதானத்தில், உள்ளூர் கால்பந்துப் போட்டி முடிந்த சிறிது நேரத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.

இதுகுறித்து பேசிய சலமன்கா மேயர் சீசர் பிரிட்டோ, “ உள்ளூர் கால்பந்து போட்டிக்குப் பிறகு மக்கள் கூடியிருந்தபோது, ​​ஆயுதம் ஏந்திய ஒரு குழு மைதானத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியது. சம்பவ இடத்திலேயே பத்து பேர் கொல்லப்பட்டனர், மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் உட்பட சுமார் 12 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நகரில் குற்றவியல் வன்முறை அதிகரித்துள்ளது. சில குழுக்கள் மாகாண அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. அதிகாரிகளை அடிபணியச் செய்ய சில குற்றக் குழுக்கள் முயற்சிக்கின்றன. அதை அவர்களால் ஒருபோதும் சாதிக்க முடியாது” என எச்சரித்தார்.

மேலும், “இன்று நாம் ஒரு கடுமையான தருணத்தையும், ஒரு தீவிரமான சமூகச் சீர்குலைவையும் சந்தித்துள்ளோம். இங்கே அமைதியை மீட்டெடுக்க அதிபர் மற்றும் மாகாண ஆளுநரிடம் ஆதரவைக் கேட்கிறேன். நாங்கள் இதுகுறித்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளோம், குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்” என்றார்.

மெக்சிகோவில் உள்ள குவானாஜுவாடோ மாகாணத்தில்தான் கடந்த ஆண்டு அதிகபட்ச கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இந்த வன்முறை பெரும்பாலும் ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் மற்றும் சாண்டா ரோசா டி லிமா கார்டெல் ஆகிய குழுக்களுக்கு இடையே சட்டவிரோத சந்தைகளை கட்டுப்படுத்துவதற்காக நடக்கிறது.

2025 ஆம் ஆண்டில் நாட்டின் கொலை விகிதம் 1,00,000 மக்களுக்கு 17.5 கொலைகள் என்ற அளவில், 2016 ஆம் ஆண்டிலிருந்து மிகக் குறைவாக இருந்ததாக மெக்சிகோ அரசாங்கம் கூறுகிறது. இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் நாட்டின் வன்முறையை முழுமையாகப் பிரதிபலிக்காமல் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மெக்சிகோ கால்பந்து மைதானத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 11 பேர் உயிரிழப்பு
வங்​கதேசத்​தில் உறங்​கிக் கொண்​டிருந்த இந்து இளைஞர் எரித்துக் கொலை: போலீஸார் தீவிர விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in