

டாக்கா: வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அதன் பிறகு இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.
பிப்ரவரி 12-ம் தேதி வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்துக்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வங்கதேசத்தின் நரசிங்கடி நகரில் நேற்று முன்தினம் இரவு சஞ்சல் பவுமிக் (25) என்ற இளைஞர் கேரேஜுக்குள் உறங்கிக் கொண்டிருந்த போது எரித்துக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து நரசிங்கடி காவல் கண்காணிப்பாளர் அப்துல்லா அல் ஃபாரூக் கூறும்போது, “சம்பவ இடத்துக்கு அருகில் ஒரு நபர் சந்தேகப்படும் வகையில் நடமாடியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 2,900-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.
வங்கதேச இந்து, பவுத்த, கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் தரவுகளின்படி, டிசம்பர் மாதத்தில் மட்டும் சிறுபான்மையினருக்கு எதிராக 10 கொலைகள், வீடுகள் மற்றும் கோயில்கள் ஆக்கிரமிப்பு, கொள்ளை மற்றும் மத நிந்தனை தொடர்பான 23 சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.