ஹார்முஸ் ஜலசந்தியில் 14 இந்திய கப்பல்களை பத்திரமாக வெளியேற்ற அரசு தீவிரம்

ஹார்முஸ் ஜலசந்தியில் 14 இந்திய கப்பல்களை பத்திரமாக வெளியேற்ற அரசு தீவிரம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள 14 இந்திய கப்பல்களை பத்திரமாக வெளியேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

இது குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து ஈரான் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம்.

நமது கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஈரானுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேலும், தற்போது ஈரானில் இந்திய குடிமக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பும் நமக்கு மிக முக்கியம்” என்றார்.

மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இருப்பினும் சீனா, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ஈரான் அனுமதி வழங்குகிறது.

மத்திய கிழக்கில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து இந்தியக் கொடி ஏந்திய 10 எல்பிஜி மற்றும் எண்ணெய் கப்பல்களை இந்தியா அப்பகுதியிலிருந்து பத்திரமாக வெளியேற்றியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த 18-ம் தேதி இந்தியக் கொடியுடன் வந்த 2 கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து இந்தத் தாக்குதல் தற்செயலானது என ஈரான் விளக்கம் அளித்தது. ஈரான் அரசு மற்றும் ராணுவம் இடையிலான தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரியவந்தது.

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கொடி ஏந்திய மேலும் 14 கப்பல்கள் சிக்கியுள்ளன. இவற்றில் மூன்று பெரிய எண்ணெய் கப்பல்களும், ஒரு பெரிய எல்பிஜி கப்பலும் அடங்கும். இந்த கப்பல்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் 14 இந்திய கப்பல்களை பத்திரமாக வெளியேற்ற அரசு தீவிரம்
ஏப்., மே, ஜூன் மாதங்களில் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கலாமே? - நீதிபதிகள் யோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in