

கோப்புப் படம்
மதுரை: விபத்துகளை தடுக்க ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கலாமே என நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
சிவகாசியை சேர்ந்த சமுத்திரவள்ளி உள்ளிட்டோர் 2014 பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த கணவரின் மரணத்துக்கு இழப்பீடு கோரி வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி, கணவரை இழந்தோருக்கான ஓய்வூதியம், வீடு உள்ளிட்ட மறுவாழ்வு பணிகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை வழங்கியிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, "தொடர்ச்சியாக விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? இது வருத்தத்தை ஏற்படுத்துகின்றன. உரிய தீர்வு காணப்பட வேண்டும்" என தெரிவித்தனர்.
அரசுத் தரப்பில், "விருதுநகர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் காப்பீடு செய்த பின்னரே அவர்கள் அப்பணியில் ஈடுபடுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். விபத்துகள் நிகழ்வது துரதிஷ்டவசமானது. பெண்களே பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்" என கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து, "கோடை காலங்களில் பட்டாசு உற்பத்தியை நிறுத்தி வைப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்க வேண்டும்" என குறிப்பிட்டு, வழக்கறிஞர்கள் தரப்பில் பட்டாசு ஆலை விபத்துகளை தடுப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.