

டெல் அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் யஷார் கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் ஆட்சி அமைக்க அந்த நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 27-ம் தேதி இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 120 தொகுதிகளில் ஆட்சியமைக்க 61 இடங்களைக் கைப்பற்ற வேண்டும். இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக ஆளும் லிகுட் கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக டுகெதர் கூட்டணிக்கு 48 இடங்கள் கிடைத்தன. இஸ்ரேலை சேர்ந்த அரபு கட்சிகளின் கூட்டணியான ஜாயின்ட் லிஸ்ட் 11 இடங்களையும் மற்றொரு அரபு கூட்டணியான ராஆம் 8 இடங்களையும் கைப்பற்றின.
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் யஷார் கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் ஆட்சி அமைக்க அந்த நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். அடுத்த 6 வாரங்களுக்குள் ஆட்சி அமைத்து பெரும்பான்மையை நிரூபிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.
இந்த சூழலில் காடி ஐசன்கோட் கூறியதாவது: நாம் இப்போது அவசரகால சூழலில் உள்ளோம். இதை புரிந்து கொண்டு எங்களது கூட்டணி அரசில் லிகுட் கட்சி மற்றும் ஆளும் கூட்டணி கட்சிகள் இணைய அழைப்பு விடுக்கிறேன். நாம் ஒன்றிணைந்து தேசிய எமர்ஜென்சி அரசை அமைக்கலாம். ஆனால் என்னை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இணைக்கப்படும்.
எங்கள் கூட்டணியின் 4 முக்கிய நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது இஸ்ரேலை யூத ஜனநாயக நாடாக அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இஸ்ரேலின் 1948-ம் ஆண்டு சுதந்திர தின அறிவிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து தரப்பினரும் கட்டாயமாக ராணுவ பயிற்சி பெற வேண்டும். ஹமாஸ் அமைப்பை தீவிரவாத குழுவாக அறிவிக்க வேண்டும். இந்த 4 நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே எங்கள் கூட்டணியில் இணையலாம். இவ்வாறு காடி ஐசன்கோட் தெரிவித்துள்ளார்.
ஜாயின்ட் லிஸ்ட் மற்றும் ராஆம் ஆகிய இரு அரபு கூட்டணிகள், காடி ஜசன்கோட்டின் கூட்டணி அரசில் இணையாமல் வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளன. எனினும் அரபு கூட்டணிகளின் ஆதரவு இன்றி பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை புதிய அரசில் இணைக்க காடி ஐசன்கோட் தீவிர முயற்சி செய்து வருகிறார்.
இந்தியாவின் தீவிர ஆதரவாளர்: இஸ்ரேலின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள காடி ஐசன்கோட் கடந்த 2015 முதல் 2019 வரை அந்த நாட்டின் ராணுவ தளபதியாகப் பதவி வகித்தார். அப்போது (2017-ல்) அன்றைய இந்திய கடற்படை தளபதி சுனில் லம்பா இஸ்ரேலில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அன்றைய இஸ்ரேல் ராணுவ தளபதி காடி ஐசன்கோட்டை அவர் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக இந்தியாவுக்கு தேவையான ஆயுதங்கள், ராணுவ தொழில்நுட்பங்களை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தியாவின் தீவிர ஆதரவாளரான காடி ஐசன்கோட், இந்திய ராணுவத்துக்கு தேவையான ஆயுத, தொழில்நுட்ப உதவிகளை வழங்க விரைந்து நடவடிக்கை எடுத்தார். இதன்பிறகே இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து அதிநவீன பராக் 8 ஏவுகணைகளை தயாரிக்க தொடங்கின. ஐசன்கோட்டின் பதவி காலத்தில் இரு நாடுகள் இடையே 200 கோடி டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.