

கலீதா ஜியா
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (80) நேற்று காலமானார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேற்குவங்கத்தின் ஜல்பைகுரியில் கடந்த 1945-ம் ஆண்டில் கலீதா பிறந்தார்.
கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உதயமாகின. அப்போது கலீதாவின் குடும்பம் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட தினஜ்பூரில் குடியேறியது. கடந்த 1960-ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ கேப்டன் ஜியாவூர் ரஹ்மானை, கலிதா திருமணம் செய்தார். அப்போது அவருக்கு 15 வயது.
கடந்த 1975 -ம் ஆண்டில் மூத்த ராணுவ தளபதி ஜியாவூர் ரஹ்மான் ஆட்சியைக் கைப்பற்றி அதிபராக பதவியேற்றார். கடந்த 1978-ம் ஆண்டில் அவர் வங்கதேச தேசிய கட்சியை (பிஎன்பி) தொடங்கினார். கடந்த 1981-ம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டார். இதன்பிறகு அவரது மனைவி கலீதா ஜியா பிஎன்பி கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.
கடந்த 1991-ல் நடைபெற்ற தேர்தலில் பிஎன்பி அமோக வெற்றி பெற்று கலீதா ஜியா வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார். கடந்த 2001 பொதுத்தேர்தலில் அவர் மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.
கடந்த 2008 முதல் 2024 ஆகஸ்ட் வரை வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் கலீதா ஜியா மற்றும் அவரது மகன்கள் தாரிக் ரஹ்மான், அரபாத் ரஹ்மான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. மூத்த மகன் தாரிக் ரஹ்மான் அரசியலை விட்டு விலகி பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் குடியேறினார். இளைய மகன் அராபத் ரஹ்மான் தாய்லாந்தில் குடியேறினார். பின்னர் மலேசியாவுக்கு சென்ற அராபத் கடந்த 2015 ஜனவரி 24-ல் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதனிடையே ஊழல் வழக்குகள் காரணமாக கடந்த 2018-ல் கலீதா ஜியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் கடந்த 2020-ல் அவர் வீட்டு சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 2021 முதல் 2025 வரை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
கடந்த நவம்பரில் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் கலீதா ஜியா அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், இதய நோய் பாதிப்புகள் தொடர்பாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சூழலில் லண்டனில் வசித்து வந்த கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் கடந்த 25-ம் தேதி டாக்கா திரும்பி தாயை கவனித்து வந்தார். நேற்று காலை 6 மணி அளவில் கலீதா ஜியா மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறும்போது, “கலீதா ஜியா மறைவுக்காக அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெறும்” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசிய கட்சியின் தலைவருமான கலிதா ஜியா மறைவு செய்தி கவலையளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கும், வங்கதேச மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட தலைவர்கள் பலர், கலீதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.