

வாஷிங்டன்: உலக வரலாற்றில் முதல்முறையாக விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய “ஸ்டார்ஷிப்” விண்கலத்தை இரும்பு கோபுரத்தின் இயந்திர கைகள் மிக துல்லியமாகப் பிடித்து உள்ளது. இதன்மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னோடியாக விளங்குகிறது. அ்தன் சார்பில் பால்கன் மற்றும் ஸ்டார்ஷிப் ஆகிய பெயர்களில் அதிநவீன ராக்கெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இரு ராக்கெட்டுகளையும் பலமுறை பயன்படுத்த முடியும். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஸ்டார்பேஸ் பகுதியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது.
அங்கு 479 அடி உயரம், 44 அடி அகலத்தில் இரு இரும்பு கோபுரங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த கோபுரங்களில் இருந்தே ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகள் ஏவப்படுகின்றன. கடந்த 13-ம் தேதி டெக்சாஸ் மாகாணம், ஸ்டார்பேஸ் தளத்தின் இரும்பு கோபுரத்தில் இருந்து 403 அடி நீளம் கொண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
விண்வெளிக்குள் நுழைந்தபோது ராக்கெட்டில் இருந்து தனியாகப் பிரிந்த விண்கலம், 26 செயற்கைக்கோள்களை அடுத்தடுத்து நிலைநிறுத்தியது. விண்வெளி சுற்றுப் பாதையில் சுமார் 22 மணி நேரம் சுற்றிய ஸ்டார்ஷிப் விண்கலம் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை 2.48 மணிக்கு இரும்பு கோபுரத்துக்கு திரும்பி வந்தது.
அப்போது இரும்பு கோபுரத்தின் இயந்திர கைகள், விண்கலத்தை மிகவும் துல்லியமாகப் பிடித்தது. உலக வரலாற்றில் முதல்முறையாக இந்த சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பூஸ்டர் ராக்கெட்டுகளை இயந்திர கைகள் மூன்று முறை பிடித்துள்ளன.
ஆனால், தற்போது அதைவிட அதிக உயரத்திலிருந்து வந்த ஸ்டார்ஷிப் விண்கலத்தை இயந்திர கைகளால் பிடித்தது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை. இதற்கு முன்பு ஸ்டார்ஷிப் ராக்கெட் திரும்பி வரும் வழியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெக்ஸிகோ வளைகுடாவில் விழுந்தது்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்், “முதல்முறையாக இயந்திர கைகள் மூலம் விண்கலம் பிடிக்கப்பட்டு, புதிய வரலாற்று சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதற்காக உழைத்த குழுவினரை வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை், “நம்ப முடியாத கதை போல உள்ளது” என்று பாராட்டியுள்ளார்.