

வாஷிங்டன்: அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அப்துல் எல் சையத் வெற்றி பெற்று, அந்நாட்டின் முதல் முஸ்லிம் செனட்டராக தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இவரது வெற்றியின் மூலம் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம், அவரது மனைவி சாரா ஜுகாகுவின் குடும்பப் பின்னணிதான். இவர் மங்களூருவிலிருந்து சுமார் 140 கி.மீ. தொலைவில் உள்ள கர்நாடகாவின் பட்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அமெரிக்காவில் மனநல மருத்துவராகப் பணியாற்றும் சாரா, மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் படித்தபோது அப்துல் எல்-சையதை சந்தித்தார். இவர்களுக்கு 2006-ல் திருமணம் நடைபெற்றது. அமெரிக்க இடைக்காலத் தேர்தல் பிரச்சாரங்களில் சாரா தீவிரமாகப் பங்காற்றினார்.
சாராவின் தந்தை ஜுகாகு தாயேப், பட்கலில் வளர்ந்து எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவுக்குச் சென்று சிறுநீரக மருத்துவ நிபுணர் ஆனார். சாராவின் தாத்தா ஜுகாகு சம்சுதீன், ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் கல்வியாளராகவும் திகழ்ந்தவர்.
முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் பி.டி. ஜாட்டி, ஜாம்கண்டி சமஸ்தானத்தின் (தற்போதைய பாகல்கோட் மாவட்டம்) முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் நிதித்துறை துணை அமைச்சராகப் பணியாற்றியவர். அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த சாரா, 2015-ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் விகெலோஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று மனநல மருத்துவரானார்.
அப்துல் எல்-சையதின் இந்த வெற்றியை பாகல்கோட் பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவின் மிக முக்கியப் பதவிக்கு எங்களது ஜுகாகு குடும்பத்தைச் சேர்ந்தவரின் கணவர் தேர்வாகியிருப்பது பெருமிதம் அளிக்கிறது என அப்பகுதி மக்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எல்-சையத் கூறும்போது, “சுமார் 20 ஆண்டுகளாக ஒரு தென்னிந்தியக் குடும்பத்தில் வாழ்ந்து வருகிறேன். அதனால் தென்னிந்தியப் பண்பாடு எனக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. நான் ஒரு அரேபியரை விட அதிக இந்தியனாக மாறியிருக்கிறேன்” என்றார்.