கோப்புப்படம்
சென்னை: தீபாவளியை முன்னிட்டு 10 வகை காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு ரூ.100 சலுகை விலையில் கூட்டுறவு அங்காடிகள் மூலமாக இன்று முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை சார்பில் அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக 10 வகை காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு ரூ.100 சலுகை விலையில் இன்று முதல் நவ. 7-ம் தேதி வரை விற்பனை செய்யப்பட உள்ளது.
கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலைகள், கூட்டுறவுப் பண்டகசாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள், சென்னையில் 4 நடமாடும் காய்கறிக் கடைகளில் விற்பனை நடைபெறும்.
இந்த தொகுப்பில் பெரிய வெங்காயம், தக்காளி தலா 500 கிராம், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு தலா 250 கிராம், கேரட், பீன்ஸ் தலா 200 கிராம், பச்சை மிளகாய், எலுமிச்சை தலா 100 கிராம், இஞ்சி 50 கிராம், தேங்காய் 400 முதல் 450 கிராம் வழங்கப்படும். இதன் மொத்த எடை 2,550 முதல் 2,600 கிராமாக இருக்கும்.
ஒருவருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். விற்பனைப் பட்டியல் வழங்குவதுடன், நுகர்வோரின் பெயர், முகவரி, கைபேசி எண், கையொப்பம் பதிவேட்டில் பெறப்பட வேண்டும். இருப்பு, விற்பனை பதிவேடுகளையும் பராமரிக்க வேண்டும். விற்பனையான தொகுப்புகளுக்கு மட்டுமே மானியம் கோர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.