

நியூயார்க்: 25%-க்கும் அதிக உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள போதிலும், ஆப்பிரிக்காவுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் இல்லை என வேதனை தெரிவித்துள்ள கென்ய அதிபர் வில்லியம் ரூடோ, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் வாசற்படிகளில் சமத்துவம் முடிவடைவதாக விமர்சித்துள்ளார்.
ஐ.நா. பொது விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கென்ய அதிபர் வில்லியம் ரூடோ, “கடந்த ஆண்டு உலகம் 65 அரசு ஆதரவு ஆயுத மோதல்களை பதிவு செய்துள்ளது. அவற்றில், 13 முழுமையான போர்கள். வன்முறை மற்றும் மோதல்களில் கிட்டத்தட்ட 2.5 லட்சம மக்கள் கொல்லப்பட்டனர்.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு வாக்கு உள்ளது. ஆனால், போர் மற்றும் அமைதி தொடர்பான விவகாரங்களில் 188 நாடுகளுக்கு இல்லாத நிரந்தர அதிகாரம் 5 நாடுகளிடம் மட்டுமே இருக்கிறது. இந்த சபையில் முழங்கப்படும் சமத்துவம் என்பது பாதுகாப்பு கவுன்சிலின் வாசற்படியோடு முடிந்துவிடுகிறது.
சபையின் மொத்த எண்ணிக்கையில் கால் பகுதிக்கும் அதிகமாக 54 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள போதிலும், பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்பிரிக்காவுக்கு நிரந்தர இடம் வழங்கப்படுவது குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டும், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும் வருகிறது.
சர்வதேச சட்டத்தை அமல்படுத்துவதில் நம்பிக்கை குறைந்து வருகிறது. ஒரு நெருக்கடியின்போது சர்வதேச சட்டம் குறித்து உரக்கப் பேசுவதும், மற்றொரு நெருக்கடியின்போது அந்த சட்டத்தை எச்சரிக்கையுடன் கையாள்வதும், வசதிப்படும்போது அதை புறக்கணிப்பதுமான அணுகுமுறை கூடாது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பாக அரசுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் தொடங்கி 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. சீர்திருத்தம் கடினமானது என்பதற்காக அது சாத்தியமற்றது என்று நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
2024-ல் உலகளாவிய பொதுக் கடன் சாதனை அளவாக 102 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது. 46 வளரும் நாடுகள், மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவைவிட கடன் வட்டிக்கு அதிக தொகையை செலவிடுகின்றன.
வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகள் இரண்டு முதல் நான்கு மடங்கு அதிக வட்டி விகிதங்களில் கடன் பெறுகின்றன. மூலதனம் என்பது பாரபட்சம் சார்ந்ததாக இருக்கக்கூடாது.
ஆப்பிரிக்கா யாசகம் கேட்க விரவில்லை. சிறப்பு சலுகையையும் கேட்க வில்லை. இது கூட்டு வளத்துக்கான ஒரு முன்மொழிவு. தொழில்மயமான, உணவுப் பாதுகாப்பு கொண்ட, சிறந்த இணைப்பு வசதிகளும் சுய நிதியளிப்புத் திறனும் கொண்ட ஆப்பிரிக்காவால் உலகுக்கு ஒரு வலுவான கூட்டாளியாகத் திகழ முடியும்.
சில நாடுகளின் ஐ.நா. சபையாக அல்லாமல், ஒவ்வொரு நாட்டுக்குமான அமைப்பாக அது இருக்க வேண்டும்” என கென்ய அதிபர் வில்லியம் ரூடோ வலியுறுத்தினார்.