ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் பதவி விலகாவிட்டால்... - சிஜேபி எச்சரிக்கை

சிஜேபி ஒருங்கிணைப்பாளர்களின் செய்தியாளர் சந்திப்பு

சிஜேபி ஒருங்கிணைப்பாளர்களின் செய்தியாளர் சந்திப்பு

Updated on
1 min read

புதுடெல்லி: நாட்டின் மிகப் பெரிய தேசவிரோதி ஞானேஷ் குமார் என குற்றம்சாட்டியுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, அவர் 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும் என்று கெடு விதித்துள்ளது.

மேலும், அவர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் மற்றும் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கப்படும் என்று சிஜேபி எச்சரித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் நடைமுறைகள் மற்றும் சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை தொடர்பான முடிவுகள் மற்றும் உத்தரவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனைகளைத் தெரிவித்ததாக வெளியான செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவன ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அபிஜீத் தீப்கே, “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மிகப் பெரிய தேசவிரோதி. இந்திய ஜனநாயகத்துக்கு அவர் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளார். எனவே, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

48 மணி நேரத்துக்குள் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால், நாடு தழுவிய போராட்டம் மற்றும் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தை சிஜேபி தொடங்கும்.

சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்” என தெரிவித்தார்.

சிஜேபி இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா பேசுகையில், “நாங்கள் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கிறோம். எங்களின் முதல் கோரிக்கை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். அவர் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும் என்பதாகும்.

எங்களின் இரண்டாவது கோரிக்கை, வர இருக்கும் அனைத்துத் தேர்தல்களையும் உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடைமுறைக்கு முந்தைய வாக்காளர் பட்டியல்களைப் பயன்படுத்த வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் நடைமுறைகள் அனைத்தையும் ஆய்வு செய்ய ஒரு சுதந்திரமான விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

எஸ்ஐஆர் தொடர்பான முடிவெடுக்கும் செயல்முறை தொடர்பான கோப்புகளை தேர்தல் ஆணையம் அழிப்பதற்கு முன்பாக உச்ச நீதிமன்றம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான 2023-ம் ஆண்டு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது எங்களின் மூன்றாவது கோரிக்கை. இதற்கென சிவில் சமூகக் குழுக்களை உள்ளடக்கிய ஒரு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>சிஜேபி ஒருங்கிணைப்பாளர்களின் செய்தியாளர் சந்திப்பு</p></div>
“தலைமைத் தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை தேவை” - பிரியங்கா காந்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in