

லண்டன்: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் இளைய சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (66) நேற்று கைது செய்யப்பட்டார்.
இது குறித்து தேம்ஸ் வேலி காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”பொதுப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் தெரிய வந்ததன் அடிப்படையில், நார்ஃபோக் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்துள்ளோம் (ஆண்ட்ரூ பெயரை குறிப்பிடவில்லை).
இது தொடர்பாக பெர்க்ஷயர் மற்றும் நார்ஃபோக் பகுதிகளில் உள்ள முகவரிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிடிபட்டுள்ள நபர் தற்போது காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரின் பெயரை காவல் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
என்றாலும், பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் அது ஆண்ட்ரூதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் சிறார் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ஆண்ட்ரூ நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக நீண்ட காலமாகப் புகார் எழுந்து வந்தது குறிப்பிடத்தக்கது.