

உலகில் அதிகமான மொழிகள் பேசப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் பல்வேறு மொழிகளையும், பேச்சுவழக்குகளையும் (Dialect) மக்கள் பயன்படுத்திவருகின்றனர். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது 19,569 மொழிகளை மக்கள் தங்கள் தாய்மொழி எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், இவை அனைத்தும் தனித் தனி மொழிகள் அல்ல. ஒரே மொழிக்குப் பல பெயர்கள், சிறு பேச்சுவழக்கு வேறுபாடுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மொழியியல் நிபுணர்கள் உதவியுடன் இந்த 19,569 பதிவுகளையும் ஆய்வுசெய்து அவை 1,369 தனித்துவமான தாய்மொழிகள் என வகைப்படுத்தப்பட்டன. இவற்றில் குறைந்தது 10,000 பேருக்கு மேல் பேசுபவர்கள் உள்ள மொழிகளை மட்டுமே அரசு கணக்கில் எடுத்துக்கொண்டது.
அந்த அடிப்படையில் இந்தியாவில் தற்போது 121 மொழிகள் உள்ளன. மொழியியல் துறையில் ஆய்வுசெய்யும் Ethnologue என்ற பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டு உள்ள தரவுகள், இந்தியாவில் ஏறக்குறைய 424 மொழிகள் இன்னும் வழக்கில் உள்ளன என்கிறது.
இதில் பல சிறு மொழிகள் அரசுக் கணக்கெடுப்பில் தனியாகக் குறிப்பிடப்படவில்லை; அவை பெரிய மொழிகளின் பேச்சுவழக்குகளாவே கருதப்பட்டுள்ளன (Ethnologue – Languages of India). ஆகவே, இந்தியாவில் மொழிகளின் எண்ணிக்கை, தரவுகளின் ஆதாரத்தைப் பொறுத்து மாறுபடுகிறது.
அழிந்த மொழிகள்: பண்டைய இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள், கிளைமொழிகள் இருந்தன என்பது கல்வெட்டுகள், பண்டைய இலக்கியங்கள், மொழியியல் ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. UNESCO – World’s Languages in Danger என்கிற சர்வதேச அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவில் இதுவரை 40க்கும் மேற்பட்ட மொழிகள் முழுமையாக அழிந்துவிட்டன.
ஏறத்தாழ 200 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. இம்மொழிகளில் சிலவற்றை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே தற்போது பேசுகின்றனர். நிஹாலி மொழி மத்திய இந்தியாவில் பேசப்படுகிறது.
இந்த மொழி எந்த ஒரு மொழிக் குடும்பத்திலும் சேராத தனித்துவமான மொழி. நீலகிரி மலைப்பகுதியில் பேசப்படும் தொதவ (Toda) மொழி ஒரு திராவிட மொழி. தொதவ மக்களின் மரபான மதச் சடங்குகள், பாடல்கள், வழிபாடுகள் அனைத்தும் தொதவ மொழியிலேயே நடைபெறுகின்றன. தொதவ மொழியைப் பேசுவது அரிதாகிவருகிறது.