

கானா: டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்றும், தன்னால் கட்டப்பட்ட ‘நோவா பேழை’ மட்டுமே மக்களைக் காப்பாற்றும் என்றும் அறிவித்திருந்த கானா நாட்டு நபர் தற்போது அந்த தேதியை கடவுள் தள்ளிவைத்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
கானாவைச் சேர்ந்த எபோ நோவா என்ற நபர், பைபிளில் கூறப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு பிரம்மாண்டமான பேழையை கடந்த சில ஆண்டுகளாகக் கட்டி வந்தார். 2025ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று உலகம் முழுவதும் பெரும் வெள்ளம் ஏற்படும் என்றும், அந்தப் பேழையில் ஏறுபவர்கள் மட்டுமே உயிர் பிழைப்பார்கள் என்றும் அவர் தனது ஆதரவாளர்களிடம் கூறி வந்தார். இதன் காரணமாக, நைஜீரியா, கேமரூன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு, கானாவில் உள்ள அந்தப் பேழை பகுதிக்குக் குடிபெயர்ந்தனர்.
ஆனால் இன்று (டிசம்பர் 25) அவர் கணித்தபடி வெள்ளம் ஏற்படாததைத் தொடர்ந்து, தனது திட்டத்தை கடவுள் ஒத்தி வைத்து விட்டதாக அவர் அறிவித்துள்ளார். கடவுள் தமக்கு விடுத்த அறிவுறுத்தலின்படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பிற்காகத் தங்கள் வாழ்வாதாரத்தை விட்டுவிட்டு வந்த அந்த மக்கள், தற்போது எபோ நோவாவின் பேழை அமைந்துள்ள இடத்திலேயே தங்கியுள்ளனர்.இந்தச் சம்பவம் சர்வதேச ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத நம்பிக்கையைப் பயன்படுத்தி மக்களை எபோ நோவா ஏமாற்றுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தனது ஆதரவாளர்கள் கொடுத்த பணத்தில் அவர் விலையுயர்ந்த பென்ஸ் வாங்கியுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
தற்போது அந்தப் பேழை அமைந்துள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் தற்காலிகக் கூடாரங்களில் தங்கியுள்ளனர். அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். அந்தப் பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.