தாரிக் ரஹ்மான்
17 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்துக்கு திரும்பிய தாரிக் ரஹ்மான்: பின்னணி என்ன?
டாக்கா: வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் (Nationalist Party) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ளார்.
தாரிக் ரஹ்மான் தனது மனைவி ஜுபைதா ரஹ்மான் மற்றும் மகள் ஜைமா ரஹ்மான் ஆகியோருடன் லண்டனில் இருந்து வங்கதேச ஏர்லைன்ஸ் விமானம் மூலம் தாயகம் வந்தடைந்தார். தற்போது, தேசியவாதக் கட்சியை நடத்தி வருகிறார் கலீதா ஜியா. இவர் வங்கதேசத்தில் இருமுறை பிரதமராக இருந்துள்ளார். அவர் பிரதமராக பதவி வகித்த காலத்தில் முக்கிய முடிவுகளை மகன் தாரிக் ரஹ்மான் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
அதன்பிறகு வங்கதேசத்தில் நடந்த ஆட்சி மாற்றம் காரணமாக தாரிக் ரஹ்மான் வெளிநாடு சென்றார். 17 ஆண்டுகளுகளாக வெளிநாட்டில் இருந்த நிலையில், தற்போது நாடு திரும்பி உள்ளார். கலீதா ஜியாவும் உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இது வங்கதேசத்தில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த மாணவர் போராட்டத்தின் விளைவாக, பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அதன் பிறகு வங்கதேசத்தில் அமைதியான சூழல் இல்லை. இந்நிலையில், லண்டனில் இருந்து டாக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய தாரிக் ரஹ்மானுக்கு அவரது ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பு வழங்கினர்.
வரவிருக்கும் தேர்தலில் அவாமி லீக் கட்சி போட்டியிட முடியாத நிலையில், தாரிக் ரஹ்மானின் தேசியவாதக் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் பிரதமர் ஆகும் கனவில் நாடு திரும்பியுள்ள தாரிக் ரஹ்மான், போகுரா-6 (சதர்) தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
