

மாஸ்கோ: ரஷ்யா - உக்ரைன் இடையே மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய அதிபர் புதின் இல்லத்தை நோக்கியும் உக்ரைன் ட்ரோன்களை ஏவியதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.
இந்நிலையில் புத்தாண்டான நேற்று ரஷ்யாவின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன் அனுப்பியது. இவற்றில் 168 ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு ஆயுதங்கள் இடைமறித்து அழித்தன. பிரயான்ஸ்க் பகுதியில் 61 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
மாஸ்கோவில் 9 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அசோவ் கடல் பகுதியில் 24 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவ்வாறு ரஷ்யாவில் பல பகுதிகளில் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
ஆனால் ரஷ்யாவின் கெர்சன் மாகாணத்தின் கொர்லி கடற்கரை நகரில் உள்ள உணவு விடுதி மீது 3 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற 24 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என் கெர்சன் மாகாண ஆளுநர் விளாடிமிர் சால்டோ தெரிவித்தார்.