

உஸ்மான் கவாஜா
சிட்னி: வரும் 4-ம் தேதி சிட்னியில் தொடங்கும் ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டிதான் தனது கடைசி போட்டி என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார்.
39 வயதான உஸ்மான் கவாஜா, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்தது. அப்போது அவருக்கு வயது 4. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட கவாஜா, ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி, தனது அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். டாப் ஆர்டரில் ஆடும் இடது கை பேட்ஸ்மேன்.
கடந்த 2010-11 ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் கவாஜா அறிமுக வீரராக களம் கண்டார். அந்தப் போட்டி சிட்னியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,206 ரன்களை அவர் எடுத்துள்ளார். இதில் 16 சதங்கள் மற்றும் 28 அரைசதங்கள் அடங்கும். 2021-23ல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியில் கவாஜா அங்கம் வகித்தார். அந்த சீசனில் அவர் 1,621 ரன்கள் எடுத்திருந்தார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர் (2023) விருதையும் அவர் வென்றுள்ளார்.
“அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன். எதிர்வரும் சிட்னி டெஸ்ட் போட்டிதான் நான் விளையாடும் கடைசிப் போட்டி” என கவாஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.