‘‘கட்சி விஷயங்களில் நிதின் நபின் எனது பாஸ்; நானொரு தொண்டன்’’ - பிரதமர் மோடி

‘‘கட்சி விஷயங்களில் நிதின் நபின் எனது பாஸ்; நானொரு தொண்டன்’’ - பிரதமர் மோடி
Updated on
3 min read

புதுடெல்லி: கட்சி விஷயங்களில் நிதின் நபின் எனது பாஸ். நான் ஒரு தொண்டன். இப்போது அவர் நம் அனைவருக்கும் தலைவர். அவரது பொறுப்பு பாஜகவை நிர்வகிப்பது மட்டுமல்ல, NDA-வில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்பதும் ஆகும் என்று பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டார். இதை கொண்டாடும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, “உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதின் நபினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கடந்த பல மாதங்களாக கட்சியின் மிகச்சிறிய பிரிவு முதல் தேசியத் தலைவர் தேர்தல் வரை அனைத்தும் நூறு சதவீதம் ஜனநாயக முறையில் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாள், அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் 100-வது ஆண்டு விழா போன்ற குறிப்பிடத்தக்க விழாக்களை நாம் கொண்டாடியுள்ளோம். நாட்டுக்காக வாழ வேண்டும் என்ற நமது உறுதியை இவை மேலும் வலுப்படுத்தி உள்ளன.

நமது தலைமை பாரம்பரியத்தால் வழிநடத்தப்படுகிறது, அனுபவத்தால் வளப்படுத்தப்படுகிறது, சேவை உணர்வோடு நமது அமைப்பை முன்னோக்கி வழிநடத்துகிறது. அடல் பிஹாரி வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் தலைமையில், பாஜக பூஜ்ஜியத்திலிருந்து உச்சிக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டது. வெங்கையா நாயுடு, நிதின் கட்கரி போன்ற தலைவர்களால் கட்சி விரிவுபடுத்தப்பட்டது. ராஜ்நாத் சிங்கின் தலைமையில் கட்சி முதல் முறையாக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

பின்னர் அமித் ஷாவின் தலைமையில், கட்சி பல மாநிலங்களில் அரசாங்கங்களை அமைத்ததுடன், மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு ஜே.பி. நட்டாவின் தலைமையில், பாரதிய ஜனதா கட்சி பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை மேலும் வலுப்பெற்றது. பாஜகவின் அனைத்து முன்னாள் தலைவர்களையும் நான் மனதார போற்றுகிறேன்.

நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இருக்கிறார், மூன்றாவது முறையாக பிரதமராகிறார், 50 வயதில் முதல்வராகிறார், தொடர்ந்து 25 ஆண்டுகள் அரசின் தலைவராக உள்ளார் என்று மக்கள் நினைக்கலாம். இதெல்லாம் அதனதன் இடத்தில் இருக்கின்றன. என் வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், நான் ஒரு பாஜக தொண்டன். இது எனது மிகப்பெரிய பெருமை.

நிதின் நபின், ஒரு வகையில் ஒரு மில்லினியல் தலைமுறையைச் சேர்ந்தவர்தான். இந்தியாவில் பெரும் மாற்றங்களைக் கண்ட ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் தனது குழந்தைப் பருவத்தில் வானொலியில் செய்திகளைக் கேட்டு, இன்று செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு காலத்தைச் சேர்ந்தவர். அவரிடம் இளமைத் துடிப்பும், மிகுந்த அனுபவமும் ஒருங்கே அமைந்துள்ளன.

ஜனசங்கம் தனது 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த வேளையில், கட்சியின் அனைத்துத் தொண்டர்களின் அர்ப்பணிப்பிற்கு நான் தலைவணங்குகிறேன். கட்சி விஷயங்களில், நிதின் நபின் எனது முதலாளி(பாஸ்). நான் ஒரு தொண்டன். இப்போது அவர் நம் அனைவருக்கும் தலைவர். அவரது பொறுப்பு பாஜகவை நிர்வகிப்பது மட்டுமல்ல, NDA கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதும் ஆகும்.

21-ம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. இது ஒரு வளர்ந்த இந்தியா கட்டமைக்கப்பட வேண்டிய காலம். இந்த முக்கியமான காலகட்டத்தின் தொடக்கத்தில், நிதின் நபின் பாஜகவின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வார்.

நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பது கடினமாகிவிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் பாஜக இந்த வழக்கத்தை முறியடித்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பிஹார் என பல மாநில தேர்தல்களில் பாஜக மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல்களில் பாஜக-வின் வெற்றி விகிதம் முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும்.

பாஜக என்பது ஒரு கலாச்சாரம்; பாஜக என்பது ஒரு குடும்பம். இங்கு, 'உறவு' என்பது 'உறுப்பினர்' என்பதை விட முக்கியமானது. பாஜக என்பது பதவியை அல்ல, செயல்முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரம்பரியம். நாம் தலைவர்களை மாற்றுகிறோம், ஆனால் நமது லட்சியங்கள் மாறுவதில்லை. தலைமை மாறுகிறது, ஆனால் நமது திசை மாறுவதில்லை.

மக்களுக்கு சேவை செய்வது எப்போதும் நமக்கு மிகவும் முக்கியமானது. அதிகாரத்தை மகிழ்ச்சிக்காக அல்ல, சேவை செய்வதற்கான வழிமுறையாக நாம் மாற்றியுள்ளோம். எனவேதான், பாஜக மீதான பொதுமக்களின் நம்பிக்கை சீராக வளர்ந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளை மட்டும் கருத்தில் கொண்டால், பாஜகவின் பயணம் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் நம்பமுடியாத ஒன்றாக உள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில், ஹரியானா, அசாம், திரிபுரா, ஒடிசா மாநிலங்களில் பாஜக முதன்முறையாக தனது சொந்த பலத்தில் அரசாங்கங்களை அமைத்தது. மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானாவில், பாஜக மக்களின் வலுவான குரலாக உருவெடுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், பாஜக மீதான பொதுமக்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது. சட்டமன்றமாக இருந்தாலும் சரி, உள்ளாட்சி அமைப்புகளாக இருந்தாலும் சரி, பாஜகவின் வெற்றி விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில், ஆறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன, அவற்றில் நான்கு தேர்தல்களில் பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இன்று, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மட்டுமல்ல, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளிலும் பாஜகவே விரும்பத்தக்க தேர்வாக உள்ளது. இதற்கு மகாராஷ்டிரா ஒரு சமீபத்திய உதாரணம். மகாராஷ்டிராவின் உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக முதலிடத்தில் உள்ளது. 29 முக்கிய நகரங்களில் 25 நகரங்களின் மக்கள் பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். வெற்றி பெற்ற மொத்த கவுன்சிலர்களில், 50 சதவீதம் பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள்.

அதேபோல், கேரளாவில், பாஜக கிட்டத்தட்ட 100 கவுன்சிலர்களைக் கொண்டுள்ளது. திருவனந்தபுரம் மக்கள் மேயர் தேர்தலில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு இடதுசாரிகளிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி பாஜகவிடம் அளித்துள்ளனர். அடுத்து சட்டப்பேரவைத் தேர்தலில் கேரளா பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும் என்று நம்புகிறேன். பாஜக ஒரு காலத்தில் வித்தியாசமான கட்சியாக தனது பயணத்தைத் தொடங்கியது. இன்று, பாஜக நல்லாட்சியைக் கொண்ட கட்சியாகும்.

சமூக நீதி என்ற முழக்கத்தை உண்மையிலேயே செயல்படுத்தியது பாஜகதான். ஏழைகளுக்கான நலத்திட்டங்களை அரசாங்கக் கோப்புகளிலிருந்து ஏழைகளின் வீடுகளுக்கு வழங்கியுள்ளோம். 2047 ஆம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க நாட்டு மக்கள் உறுதியாக உள்ளனர். எனவே, கடந்த 11 ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட சீர்திருத்தப் பயணம் சீர்திருத்த எக்ஸ்பிரஸ் ஆக மாறியுள்ளது.

கட்சி நம்மை விட பெரியது, நாடு கட்சியை விட பெரியது. இது ஒவ்வொரு பாஜக தொண்டனின் வாழ்க்கை மந்திரம். நாம் ஒவ்வொரு சவாலையும் முழு பலத்துடன் எதிர்கொள்ள வேண்டும். இன்று, நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் ஊடுருவல். உலகின் சக்திவாய்ந்த நாடுகள் கூட தங்கள் நாடுகளில் ஊடுருவுபவர்களை விசாரித்து அவர்களைப் பிடித்து வெளியேற்றி வருகின்றன.

உலகில் யாரும் தங்கள் நாட்டுக்குள் ஊடுருவல்காரர்களை ஏற்றுக்கொள்வதில்லை. ஏழைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளைப் பறிக்கும் ஊடுருவலை இந்தியாவிலும் அனுமதிக்க முடியாது. ஊடுருவல்காரர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவது அவசியம். வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்கும் அரசியல் கட்சிகளை நாம் பொதுமக்கள் முன்பு அம்பலப்படுத்த வேண்டும்’’ என தெரிவித்தார்.

‘‘கட்சி விஷயங்களில் நிதின் நபின் எனது பாஸ்; நானொரு தொண்டன்’’ - பிரதமர் மோடி
பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு: மோடி, ராஜ்நாத் சிங் நேரில் வாழ்த்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in