

கராகஸ்: வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ராட்ரிக்ஸ் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த 3-ம் தேதி வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதலை நடத்தியது. அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலாயா புளோரஸ் கைது செய்யப்பட்டனர். இருவரும் அமெரிக்காவின் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மதுரோ, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட சூழலில் புதிய அதிபர் தொடர்பாக அந்த நாட்டின் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், ராணுவ தரப்பில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் எட்டப்பட்ட உடன்பாட்டின்படி வெனிசுலா துணை அதிபர் டெல்சி ராட்ரிக்ஸ் நேற்று இடைக்கால அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
தலைநகர் கராகஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு பிறகு அவர் பேசியதாவது: வெனிசுலா அதிபர், அவரது மனைவி அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு உள்ளனர். நமது நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் சட்ட விரோதமாக தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த துயரமான நேரத்தில் இடைக்கால அதிபராக பதவியேற்கிறேன். நாட்டு மக்களின் நலன் கருதி அமெரிக்க அரசுடன் இணக்கமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படும். இவ்வாறு டெல்சி தெரிவித்தார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ நேற்று நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மதுரோ கூறும்போது, “நான் நிரபராதி, குற்றமற்றவன். நான் ஒரு நாட்டின் அதிபர். என்னை சட்டவிரோதமாக கடத்தி உள்ளனர்” என்றார்.
இதை மறுத்த அரசு தரப்பு, “அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் மதுரோ ஈடுபட்டார். அமெரிக்காவுக்குள் போதை பொருட்கள், ஆயுதங்களை கடத்தினார்” என்று குற்றம் சாட்டியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆல்வின், அடுத்த விசாரணையை மார்ச் 17-க்கு ஒத்திவைத்தார்.
நியூயார்க் நீதிமன்றத்தில் மதுரோவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில் அவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.