

‘யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும்’ என்று சொல்கிற அனுபவப் பகிர்தலைப் போலவே, அதிகாரியாகப் பணியாற்றிய கணங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அத்தேர்வு குறித்துச் சிறிதும் அறியாதவர்களையும்கூட அதன் பக்கம் ஈர்க்கிற வல்லமை அவற்றுக்கு உண்டு என உணர்த்துகிறது க.நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.ஸின் ‘அதற்குத் தக’ நூல்.
தற்போது இவர் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராகப் பணியாற்றுகிறார். விஷ்ணுபுரம் சரவணன், க.துளசிதாசன் தொகுத்த இந்த நூலை எஸ்ஆர்வி தமிழ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நந்தகுமாரின் தந்தை லாரி ஓட்டுநர். நாடு முழுவதும் பயணித்த அனுபவம் உள்ளவர். வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கிற பொறுப்பை தாய் ஏற்றுக்கொண்டார்.
சக மனிதர்கள் மீதான பார்வை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தன் பெற்றோர்களிடம் இருந்தே இவர் பெற்றிருக்கிறார். படிப்பில் முதல் மாணவராக இருப்பவரே ஐஏஎஸ் விருப்பத்தை நோக்கி நகர முடியும் என்பதை உடைத்தெறிகிறது இவரது வாழ்க்கை. அரசுப் பள்ளியில் சராசரிக்கும் மேலான மதிப்பெண் பெறுகிற மாணவராக இருந்த நந்தகுமார், எந்தவித நாட்டமும் இல்லாமல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்.