

புதுடெல்லி: ஐ.நா-வின் சிறப்பு பிரதிநிதியான பென் சவுல், கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்த அறிக்கையில், மிகவும் தேடப்படும் தீவிரவாதிகளில் ஒருவரான தாவூத் இப்ராஹிம் இந்தியாவில் வசித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் இந்தத் தவறான அறிக்கைக்கு பதிலடியாக ஐ.நா.வுக்கான இந்திய தூதரக முதன்மைச் செயலர் ரகு பூரி கூறியுள்ளதாவது: தாவூத் இப்ராஹிம் 2003-ம் ஆண்டு ஐ.நா-வின் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார்.
அல்காய்தா மற்றும் ஒசாமா பின்லேடனுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக அவர் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை அரசின் கொள்கையாகவே கொண்டுள்ள ஒரு தோல்வியடைந்த நாட்டில்தான்(பாகிஸ்தான்) தாவூத் பதுங்கி இருக்கிறார். இன்று வரை, தாவூத் எங்களது நாட்டில் தேடப்படும் குற்றவாளியாகவே இருந்து வருகிறார்.
ஒசாமா பின்லேடன் அழிக்கப்பட்ட அதே நாட்டில்தான் அவரும் பதுங்கி இருக்கிறார். மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் உட்பட, இந்தியாவில் தேடப்படும் பல தீவிரவாதிகள் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பாகிஸ்தானிலேயே வசித்து வருகின்றனர்.
தீவிரவாத ஆதரவாளர்கள் தங்களது தவறான செயல்களை நியாயப்படுத்த மனித உரிமைகளை பயன்படுத்துவது வழக்கமாக மாறிவிட்டது. இந்த உண்மையைக் குறிப்பிடாமல் விட்டது வருந்தத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.