

லக்னோ: உத்தர பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்றார். அப்போது, பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை ஒடுக்குவதற்காக, ரவுடிகள் தடுப்புச் சட்டத்தை இயற்றினார்.
இச்சட்டத்தின்படி, ரவுடிகளின் சொத்துகளை முடக்குவது, சட்ட விரோதக் கட்டிடங்களை இடிப்பது, அவ்வாறு மீட்கப்படும் முக்கியமான நிலங்களில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பது ஆகியவை அடங்கும். ரவுடிகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், சொத்துகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த மதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன்படி, கடந்த 2021-ல் ரூ.1,800 கோடி, 2023 மார்ச்சில் ரூ.9,022.33 கோடி 2024-ல் ரூ.14,246 கோடி, 2026 அக்டோபரில் ரூ.15,233 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சொத்துகளை முடக்குதல், சட்டவிரோதக் கட்டிடங்களை இடித்தல், நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு சொத்துகளை இறுதியாகப் பறிமுதல் செய்தல் என மூன்று வகையான சட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். மேலும், குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களில் இதுவரை 148 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழைக் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக, உத்தர பிரதேசத்தின் மிகவும் பிரபலமான குற்றக் கும்பல்களில் ஒன்றின் கட்டுப்பாட்டில் முன்பு இருந்ததாகக் கூறப்படும் பிரயாக்ராஜில் உள்ள கசாரி-மசாரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ், 1,200 வீடுகள் கட்டப்பட உள்ளன.