

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் பட்டத்து இளவரசர் அல்-ஹுசைன் பின் அப்துல்லா-2.
அம்மான்: பிரதமர் நரேந்திர மோடி சென்ற காரை ஜோர்டான் நாட்டின் பட்டத்து இளவரசர் அல்-ஹுசைன் பின் அப்துல்லா-2 ஓட்டியது பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஜோர்டான் நாட்டுக்கு 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு ஓட்டலில் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இரு நாடுகள் இடையே ராஜீய உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் மோடி இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
முதல் நாளான நேற்று முன்தினம், ஜோர்டான் மன்னர் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்தித்து, இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. இந்நிலையில், 2-ம் நாளான நேற்று, ஜோர்டான் நாட்டுப்பட்டத்து இளவரசர் அல்-ஹுசைன் பின் அப்துல்லா-2-வுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க பெட்ரோ நகரைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்த இளவரசர், முஸ்லிம்களின் இறை தூதராகப் போற்றப்படும் முகம்மது நபியின் 42-வது தலைமுறை நேரடி வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
அப்போது, ஜோர்டான் அருங்காட்சியகத்துக்கு பிரதமர் மோடி பயணித்த காரை அந்நாட்டின் இளவரசர் அல்-ஹுசைன் பின் அப்துல்லா-2 ஓட்டினார். இதுதொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இருநாள் பயணத்தை முடித்துக்கொண்டு எத்தியோப்பியா நாட்டுக்கு புறப்பட்ட பிரதமர் மோடியை விமான நிலையத்துக்குச் சென்று அந்நாட்டு இளவரசர் வழியனுப்பி வைத்தார். ஜோர்டான் நாட்டு இளவரசரின் இந்த பண்புமிக்க செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.