

காபூல்: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பினரும் அறிவித்திருந்த குறுகிய காலப் போர் நிறுத்தம் கடந்த புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் குனர் மாகாணத்தில் உள்ள நராய் மற்றும் சர்கானோ மாவட்டங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்த மாகாணத்தின் செய்தி மற்றும் கலாச்சாரத் துறை இயக்குநர் ஜியாவுர் ரஹ்மான் ஸ்பீன்கர் தெரிவித்தார்.
இருவர் உயிரிழப்பு இதுகுறித்து அவர் கூறுகையில், “பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்ததோடு, 8 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு ஆப்கன் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் பாகிஸ்தானின் மூன்று ராணுவச் சாவடிகள் அழிக்கப்பட்டதுடன், ஒருவர் கொல்லப்பட்டார்” என்றார்.
இருப்பினும், இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்படவில்லை. அதே வேளையில், ஆப்கன் படைகளே முதலில் தாக்குதலை ஆரம்பித்ததாக பாகிஸ்தான் தரப்பு அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.