

சீன மனித ரோபோக்கள் சவுதியின் ‘அர்தா’ வாள் நடனம் ஆடி விருந்தினர்களை வியக்க வைத்தன.
ரியாத்: சீன தூதரகம் சார்பில் ரியாத்தில் நடந்த தேசிய தின விழாவில், சீன மனித ரோபோக்கள் சவுதியின் ‘அர்தா’ வாள் நடனம் ஆடி விருந்தினர்களை வியக்க வைத்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சீன மக்கள் குடியரசு 1949 அக்டோபர் 1-ம் தேதி நிறுவப்பட்டதன் 77-வது ஆண்டை நினைவுகூரும் வகையில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரியாத் மண்டல மேயர் இளவரசர் பைசல் பின் அப்துல்அசீஸ் பின் அய்யாப் அல்-முக்ரின், சவுதிக்கான சீன தூதர் சாங் ஹுவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், சவுதி ஆண்கள் அணியும் பாரம்பரிய ‘தோப்’ உடையையும் ‘குத்ரா’ தலைப்பாகையையும் அணிந்த மனித ரோபோக்கள் மேடைக்கு வந்தன. கைகளில் பாரம்பரிய வாள்களை ஏந்தியபடி, மரபு சார்ந்த முரசு இசைக்கு ஏற்ப ஒருங்கிணைந்த வரிசையில் நகர்ந்தும், திரும்பியும், குனிந்து வணங்கியும் அர்தா நடனத்தின் பல அசைவுகளை அவை வெளிப்படுத்தின. நடனத்தின்போது சமநிலையைப் பராமரித்த விதமும், அசைவுகளில் இருந்த நேர்த்தியும் அரங்கில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, தூதர் சாங் ஹுவா இந்த நடனத்தின் வீடியோவை ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்தார். “சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 77-வது ஆண்டை முன்னிட்டு எங்கள் தூதரகம் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது.
எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி. சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் அற்புதமாக நிகழ்ச்சியை வழங்கி, பங்கேற்றவர்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த வீடியோ வெளியானதும், இது சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சான்று என்று பலரும் எக்ஸ் தளத்தில் பாராட்டினர்.