

சென்னை: அப்போலோ நாலெட்ஜ் நிறுவனம் மற்றும் பிர்லா இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (பிட்ஸ்-பிலானி) ஆகியவை மருத்துவ சேவைத் துறை ஆராய்ச்சி, கல்வி, பணியாளர் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இணைந்து செயல்பட உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன.
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை செயல் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி மற்றும் பிட்ஸ்-பிலானி குழுமத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வி.ராம்கோபால் ராவ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தக் கூட்டாண்மை, அப்போலோ மருத்துவமனை வலையமைப்பின் மருத்துவச் சூழலையும், பிட்ஸ்-பிலானி கல்வி நிறுவனத்தின் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தரவு அறிவியல் துறைகளின் திறன்களையும் ஒருங்கிணைக்கிறது. மருத்துவர்கள் மற்றும் பிட்ஸ்- பிலானி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மருத்துவம் மற்றும் மருத்துவ சேவைத் துறைகளில் உள்ள சவால்கள் தொடர்பாக கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள். இந்தக் கூட்டாண்மை மேலும் வளர்ச்சியடையும் நிலையில், குறிப்பிட்ட ஆராய்ச்சித் துறைகள் அடையாளம் காணப்படும்.
இதுகுறித்து, அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் குழும துணை செயல் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி கூறும்போது, “மருத்துவ சேவைத் துறை நிபுணர்கள் நோயாளிகளைப் பராமரிக்கும் பணியுடன் கல்வியைத் தொடரவும், வேகமாக மாறிவரும் உலகுக்குத் தேவையான திறன்களை உருவாக்கவும், மருத்துவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சியை முன்னெடுக்கவும் இந்தக் கூட்டாண்மை வழிவகுக்கும்” என்றார்.